மாஸ்க் - க்கு நோ சொல்வது ஆபத்து ..குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் அவசியம்..? விளக்கும் நிபுணர்..
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசியை விரைந்து செலுத்த வேண்டும் என்று வைரஸ் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசியை விரைந்து செலுத்த வேண்டும் என்று வைரஸ் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்பு நன்கு குறைந்துள்ளது. இதனால் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்கள் தளர்த்தியுள்ளன. தமிழகத்திலும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 50 க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் அனைத்து தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.
டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் முக கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு இனி முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தற்போது 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 184.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 83.1 கோடி ஆக உள்ளது.
இந்நிலையில் இதர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பூசியை விரைந்து செலுத்த வேண்டும் என்று வைரஸ்கள் ஆய்வுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரியா ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.
மேலும் நம் நாட்டில், கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளதால், பல்வேறு மாநிலங்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. இவற்றை முழுமையாக நிறுத்த இது சரியான நேரமாக எனக்கு தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என்றூ தெரிவிக்கும் அவர், குழந்தைகள் சரியாக முக கவசம் அணியாத நிலையில், அவர்கள் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார்.எனவே, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. குறிப்பாக, புற்றுநோய் உள்ளிட்ட இதர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் நாடு முழுவதும் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16 கோடி டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கியது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.