corona India: அட கடவுளே..! வரும் ஜூன் மாதத்தில் கொரோனா 4 வது அலை..? கான்பூர் ஐஐடி கணிப்பு..
இந்தியாவில் வருகிற ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கொரோனா 2 வது அலை முடிந்து நோய் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில், பொதுமுடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் எனும் உருமாற்ற அடைந்த கொரோனா வைரஸ் புது அச்சத்தை ஏற்படுத்தியது.
கண்டறியப்பட்ட சில வாரங்களில், உலகில் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவியது. இந்தியாவில் அதிகளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் விட அதி வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இந்த ஒமைக்ரான் வைரஸ் குறிப்பிடப்பட்டது. ஆனாலும், இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் தாக்கம் குறைந்த அளவிலே இருந்தது. மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.ஒமைக்ரான் தொற்றினால் உயிரிழப்புகளும் மிக குறைவாகவே பதிவாகின.
ஆனால் இந்தியாவில் டிசம்பர் இறுதியில் இருந்து தினசரி கொரோனா தொற்று பாதிப்பு திடீரென்று எகிறத் தொடங்கியது. மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தது. இதனால், முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்தன. பின்னர் ஜனவரி மாத தொடக்கத்தில் நாட்டில் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது. இதனிடையே பிப்ரவரி மாதத்தில் கொரோனா தொற்று படிபடியாக குறைய தொடங்கியது. தற்போது நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் பெரும்பாலான மாநிலங்களில் குறைவாக உள்ளனர்.
இதனால், கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் நிலைக்கு ஏற்ப, சமூக, விளையாட்டு, மத, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கட்டுப்பாடுகளை மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் நீக்கி விடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்வி, திருவிழா தொடர்பான கட்டுப்பாடுகளையும் நீக்க முடிவெடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24ஆம் தேதி வரை கொரோனா நான்காவது அலை பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய வகை கொரோனா மற்றும் தடுப்பூசி போட்டதன் விகிதம் உள்ளிட்டவை அடிப்படையிலேயே, கொரோனா நான்காவது அலையின் தீவிரம் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கான்பூர் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவது முறையாக, கொரோனா அலையின் பாதிப்பை கணித்துள்ளனர். கடந்த அலையின் போது இவர்களின் கணிப்பு, கிட்டத்தட்ட சரியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.