’corona 3rd wave’ இன்னும் மூன்று வாரம் நீடிக்கும்.. கிராமங்களில் வேகமெடுக்கும் கொரோனா..? ஆய்வறிக்கையில் தகவல்

கொரோனா 3 ஆம் அலை அதிகபட்சமாக இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி போன்றவை மூலம் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் எஸ்பிஐ வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

corona 3rd wave alert

நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த இரு நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,82,970 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி நிலவரப்படி , தினசரி பாதிப்பு 2.71 லட்சமாகவும், 16-ம் தேதி 2.58 லட்சமாகவும், நேற்று முன்தினம் 2.38 லட்சமாகவும் குறைந்திருந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. 3-வது அலையில், இதுவரை இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு உச்சத்துக்கு சென்றுள்ளது. 

corona 3rd wave alert

மகாராஷ்டிராவில் 39,207 பேரும், கேரளாவில் 28,481 பேரும், தமிழகத்தில் 23,888 பேரும், குஜராத்தில் 17,119 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 14,701 பேரும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 441 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் கோவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலை குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,கொரோனா தொற்று அதிகம் கொண்ட முதல் 15 மாவட்டங்களில் புதிய தொற்று எண்ணிக்கை சரிய தொடங்கியதில் இருந்து நம்பிக்கை வந்துள்ளது. மும்பை அதன் உச்சத்தை அடைந்து, ஜனவரி 7-ம் தேதி அன்று 20,971 கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

corona 3rd wave alert

புனே மற்றும் பெங்களூருவில் தினசரி புதிய எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி, மும்பை போன்ற நகரங்கள் 3வது அலையின் உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால் நாடுதழுவிய அளவில் இன்னும் உச்சம் எட்டவில்லை. மற்ற மாவட்டங்களும் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தி, பரவலைக் கட்டுப்படுத்தினால், மும்பை உச்சத்திற்குப் பிறகு 2-3 வாரங்களுக்குள் நாட்டின் உச்சநிலை தொடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொரோனா 3 ஆம் அலை, இந்தியாவில் நாளொன்றுக்கு 4 லட்சத்தை தாண்ட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 10 முக்கிய நகரங்கள் உட்பட முதல் 15 மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த டிசம்பர் இல் 67.9 %ஆக இருந்து ஜனவரியில் 37.4% ஆக குறைந்துள்ளது.கொரோனா புதிய எண்ணிக்கை கிராமப்புற மாவட்டங்களின் ஒட்டுமொத்த பங்கு டிசம்பர் 2021 இல் 14.4% ஆக இருந்து 2022 ஜனவரியில் 32.6% ஆக அதிகரித்துள்ளது.ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், பிஹார், ஜம்மு காஷ்மீர், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த புதிய கொரோனா எண்ணிக்கை கிராமப்புற பகுதிகளில் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona 3rd wave alert

ஆந்திரப் பிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தகுதியுள்ள மக்களில் 70% க்கும் அதிகமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ளன. மற்ற நாடுகளில், பொதுவாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய 54 நாட்களுக்குள் அலையின் உச்சம் வந்துவிட்டது. தற்போதைய உச்ச எண்ணிக்கை சராசரியாக முந்தைய உச்சத்தை விட 3.3 மடங்கு அதிகம். இந்தியாவில் ஏப்ரல்-மே 2021 இல் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது, உச்சம் வெவ்வேறு தேதிகளில் வந்தது. தேசிய உச்சநிலைக்கு 26 நாட்களுக்கு முன்னதாக மும்பை 2வது அலையின் உச்சத்தை முதலில் அடைந்தது.

corona 3rd wave alert

இந்நிலையில் 8 முதல் 15 மாவட்டங்களில், இந்தியாவின் தினசரி தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி ஜனவரி 13 அன்று 3வது அலை உச்சத்தை அடைந்தது. அந்த நாளில் 28,000 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன. 2வது அலையின் போது, நாட்டின் உச்சநிலைக்கு 16 நாட்களுக்கு முன்பே டெல்லி அதன் உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. மாவட்டங்களுக்கு முன்பாக மெட்ரோ நகரங்கள் உச்சத்தை எட்டும் போக்கு மூன்றாவது அலையிலும் தொடர்கிறது. உச்சம் என்பது ஒரு மாநிலம் அல்லது ஒரு நகரத்தில் உள்ள மோசமான கோவிட்-19 சூழ்நிலையைக் குறிக்கிறது. அதன் பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை, நேர்மறை விகிதங்கள் போன்றவை குறையத் தொடங்குகின்றன. கோவிட் கட்டுப்பாடுகள், தடுப்பூசி போன்றவை மூலம் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios