அதிகரிக்கும் கொரோனா.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவசர ஆலோசனை.. வெளியான முக்கிய தகவல்..
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. தினசரி கொரோனா 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பதிவான நிலையில் தற்போது 8 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 50க்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200 யை தாண்டியுள்ளது. இது தவிர, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் மாநில சுகாதாரத் துறை செயலர்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலர் கடிதம் எழுதியிருந்தனர்.
அதில், கொரோனா பரவல் சில மாநிலங்களில், மீண்டும் வேகம் எடுத்து வருவது கவலை அளிக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதோடுமட்டுமல்லாமல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.
தொடர்ந்து இன்று அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கொரோனா தொற்று நிலவரம் குறித்து இன்று காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்றார். மேலும் அவர் தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று நிலவரம் குறித்து விளக்கினார். குறிப்பாக, தடுப்பூசி செயல்பாடுகள், கொரோனா பரிசோதனை அதிகரித்தல், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் இன்னும் தடுப்பூசி செலுத்தாவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர காசநோய், கண்புரை ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.