America Corona: அதிர்ச்சி..ஒமைக்ரான் வைரஸ் கோர தாண்டவம்..அமெரிக்காவில் அதிகரிக்கும் உயிரிழப்பு..
உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் ஒமைக்ரான் மாறுபாடு, அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் டெல்டா அலையின் போது ஏற்பட்ட தினசரி இறப்பு விகிதத்தை காட்டிலும், ஒமைக்ரானால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல வகியில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதிதாக ஒமைக்ரான் என்ற வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸின் பரவல் வேகம் டெல்டா வைரஸை விட தீவிரமாக இருந்தது. அதனால், அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் பதிவாகின.
குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இருப்பினும், ஒமைக்ரான் வைரஸின் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பின் தீவிரம் குறைவாக இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.ஆனால் அமெரிக்காவில் நிலைமை வேறு விதமாக உள்ளது. அங்கு தினசரி இறப்பு எண்ணிக்கை நவம்பர் பாதியிலிருந்து அதிகரித்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு இறப்போரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது.கடந்த வியாக்கிழமை மட்டும் 2,267 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், டெல்டா அலை உச்சத்தில் இருந்த போது, செப்டம்பரில் அதிகப்பட்சமாக தினசரி இறப்பு 2,100ஆக இருந்தது. ஒமைக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறினாலும், அதிகளவில் பரவுவதன் காரணமாக பலர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயதானோர்களுக்கும், இணை நோயுள்ளவர்களுக்கும், தடுப்பூசி போடதவர்களுக்கு ஒமைக்ரான் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் 8,78,000-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 2,000-த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இறப்பு வீகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் இரு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சிடிசி அறிக்கையின்படி, ஏற்கனவே நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, அயோவா, மேரிலாந்து, அலாஸ்கா மற்றும் ஜார்ஜியா உள்ளிட்ட சில மாநிலங்களில் இறப்புகள் உச்சத்தை எட்டியிருந்தாலும், வரவிருக்கும் வாரத்தில், ஏறக்குறைய ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்திலும் இறப்புகள் வேகமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.