India Corona: கொரோனா நிலவரம்… இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,184 பேருக்கு தொற்று!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் மிக குறைந்த நாட்களில் அதிகப்படியான நாடுகளுக்கு பரவியது. இதை அடுத்து அனைத்து நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை பரவ தொடங்கியது. இதை அடுத்து இந்தியாவில் முதல் அலையின் போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
இதனிடையே கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் கொரோனாவின் மூன்றாம் அலை பரவ தொடங்கியது. மேலும் ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸும் பரவி மக்களை அச்சுறுத்தி வந்தது. பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளால் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, 3 ஆம் அலை என பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், 4 ஆம் அலை ஜூன் மாதம் வரக்கூடும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 993 பேர், நேற்று 4 ஆயிரத்து 575 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 104 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 20 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 488 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.