போலீஸை குறிவைக்கும் கொரோனா 3வது அலை... 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி!!
தமிழகத்தில் 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,54,912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 28,561 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 28,561 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,112 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,79,205 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 19,978 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,26,479 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில் மறுபுறம் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா மூன்றாம் அலையாக பரவி வருகிறது. இதன் காரணமாக தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் துரிதமாக நடைபெறும் நிலையில், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலையில் இதுவரை 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 6 உயர் அதிகாரிகள் என பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் நேற்று ஒரேநாளில் 328 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.