corona Vaccine: இதுவரை 1000 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. இந்தியாவில் மட்டும் 166 கோடி.. அறிக்கையில் தகவல்.
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றிற்கு எதிராக வடிவமைக்கபப்ட்ட கொரோனா தடுப்பூசிகளில் பொதுமக்களுக்கு இதுவரை 1000 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனா,அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,ரஷ்யா,இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனாவினால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். உலகம் முழுவதையும் இரு ஆண்டுகளாக ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்றிலிருந்து மீள பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பில் இறங்கின. அதன் விளைவாக, கொரோனாவுக்கு எதிராக பல தடுப்பூசிகள் வடிவமைக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா முதல், இரண்டாம் அலை முடிந்து தற்போது உலக நாடுகள் மூன்றாம் அலையில் சிக்கியுள்ளன. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் எனும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. ஆல்பா, பீட்டா,காமா, டெல்டா, டெல்டா பிளஸ் எனும் பல்வேறு உருமாற்றகளில் மக்களிடையே பரவி தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் எனும் பெயரில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் இந்தியா கடும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்தது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.தற்போது இந்தாண்டு ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 - 18 வயது உள்ளோருக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன்களபணியாளர் மற்றும் 60 வயது மேல் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் உலகம் முழுக்க இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37.43 கோடியாக உயர்ந்திருக்கிறது. தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனாவால் 7.34 கோடி பாதித்திருப்பதாகவும் 8.84 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,இன்று மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் 1000 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 425 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 4.1 கோடி பேர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை 4.97 லட்சம் பேர் கொரோனா நோய் தீவிரத்தில் இறந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 166 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 15 முதல் 18 வயதுடையோரில் 4.5 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்திருந்தது. மேலும் உலகம் முழுவதும் 53% சதவீத மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.