உளவியல், நுண்ணுயிரியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்விக்கு யுஜிசி தடை விதித்துள்ளது. தரத்தை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission - UGC), உளவியல், உடல்நலம் சார்ந்த பட்டப்படிப்புகளை ஆன்லைன் மற்றும் தொலைதூரக் கல்வி (distance education) மூலம் கற்பதற்குத் தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம், இனி இந்த முக்கியமான படிப்புகளை வீட்டிலிருந்தே ஆன்லைனில் படிக்க முடியாது.

தடை விதிக்கப்பட்ட படிப்புகள்

யுஜிசி விதித்துள்ள இந்த புதிய விதிகளின்படி, உளவியல் (Psychology), ஊட்டச்சத்து (Nutrition), உடல்நலம் சார்ந்த (Health-related) பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் மூலம் படிக்க இனி அனுமதி கிடையாது. இதுமட்டுமல்லாமல், நுண்ணுயிரியல் (Microbiology) மற்றும் உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) போன்ற முக்கிய அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் முறையில் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடைக்கான காரணம்

இந்த புதிய விதிகள் நடப்பு கல்வியாண்டு முதலே அமலுக்கு வருவதாக யுஜிசி அறிவித்துள்ளது. உடல்நலம் சார்ந்த படிப்புகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதன் தரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது என யுஜிசி விளக்கம் அளித்துள்ளது. தரமான மற்றும் செயல்முறை சார்ந்த கல்விக்கு நேரடி வகுப்புகள் அவசியமானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.