மாதம் ரூ.2 லட்சத்துக்கு மேல் சம்பளம்... கணக்கு அலுவலர் பணிக்கான தேர்வு தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி
TNPSC : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள கணக்கு அலுவலர் பணிக்கான தேர்வு தேதியை அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள கணக்கு அலுவலர் பணிக்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி மொத்தமுள்ள 25 காலிப்பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.56 ஆயிரத்து 900 முதல் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 200 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு தேதி
இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து வருகிற அக்டோபர் மாதம் 8-ந் தேதி இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வித் தகுதி
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் நடத்திய இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் இந்த பணிக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு போதுமான தமிழறிவு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ரெஸ்யுமில் இதை மட்டும் செய்தால் உடனே பிடித்த வேலையில் சேர்ந்திடலாம்...!
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
இந்த தேர்வு எழுதுவதற்கு ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் எஞ்சி உள்ளவர்கள் தேர்வுக்கட்டணமாக ரூ.200-ம் நிரந்தர பதிவுக்கட்டணமாக ரூ.150-ம் செலுத்த வேண்டுமாம்.
விண்ணப்பிக்கும் முறை
- www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய இணையதள பக்கங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- 2022-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியின்படி, 32 வயது நிறைவடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் அருந்ததியர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிப்பது குறித்த சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்கிற மின்னஞ்சலுக்கும், மற்ற சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கும் மெயில் அனுப்பி சந்தேகங்களை தீர்த்திக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்... 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!