TNPSC Group 4 : மைனஸ் மார்க் இருக்கு.. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதோ !
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman). இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது.
மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வை 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. பகுதி 1ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். பகுதி 2ல் பொது அறிவு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு..10ம் வகுப்பு படித்தால் போதும்..ரயில்வே துறையில் அட்டகாசமான வேலைவாய்ப்பு இதோ !
மொத்தமுள்ள 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வு 38 மாவட்டங்களில் 316 தாலுகாக்களில் நடைபெறுகிறது. அனுமதி அட்டை, அடையாளச் சான்று, புகைப்படங்கள் ஆகியவற்றை மறக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். கருமை நிற மையுடைய பந்துமுனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு நேரம் முற்பகல் 9.30 மணி முதல் 12 மணி வரை ஆகும். வினாத்தொகுப்பு எண்ணை சரியாக எழுதி, அதற்குரிய வட்டங்களை நிரப்ப வேண்டும்.
இந்த எண் முறையற்று நிரப்பப்பட்டிருந்தால், (அல்லது) வினாத்தாள் தொகுப்பு எண் எழுதுவதற்கு வழங்கப்பட்ட கட்டங்களில் எழுதப்படவில்லையெனில், பெற்ற மொத்த மதிப்பெண்களில் இருந்து ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும். விடைத்தாளில் ஒவ்வொரு கேள்விக்கு விடையளிக்கும் போதும் ஒரே ஒரு சரியான விடையினை மட்டுமே நிரப்ப வேண்டும். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு விடைதெரியவில்லை என்றால்(E) என்பதை நிரப்ப வேண்டும்.
விடைத்தாளில், எந்தவொரு வினாவிற்கும் அது தொடர்பான எந்த ஒரு வட்டமும் நிரப்பப்படாதிருந்தால் தேர்வரால் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களிலிருந்து இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விரல் ரேகை வைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற தேர்வர்கள் தேவைப்படும் இடத்தில் விரல் ரேகை வைக்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!
ரேகை வைக்காவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும். ஓஎம்ஆர் தாளில் எந்தெந்த இடங்களில் எல்லாம் நீங்கள் கையொப்பம் இட வேண்டுமோ, அங்கெல்லாம் சரியாக கையொப்பமிட்டுக் கொள்ளுங்கள். அதேபோல், அறை கண்காணிப்பாளர் கையொப்பம் ஓ.எம்.ஆர் தாள் மற்றும் ஹால் டிக்கெட்டில் இடப்பட்டிருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை/பாஸ்போர்ட்/ ஓட்டுநர் உரிமம், நிரந்தரக் கணக்கு அட்டை/வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை காட்டலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !