திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது - யுஜிசி தலைவர் பாராட்டு
திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது என பல்கலைக்கழக மானிய குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை சாஸ்தரா நிகர்நிலை பல்கலை கழகத்தில் தென்மண்டல துணை வேந்தர்கள் மாநாடு நடைப்பெற்றது. மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட யூ.ஜி.சி சேர்மன் கே.ஜெகதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், உயர் கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் தான் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்பட மிக உயரிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதேபோல சென்னை ஐஐடி உள்ளிட்ட மிகச் சிறந்த மத்திய கல்வி நிறுவனங்களும் இங்குதான் இருக்கின்றன. இதன் மூலம், தமிழ்நாட்டில் மிகச் சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, திறமையான மனித வளம் உருவாக்கப்படுவதால், தொழில் ரீதியாகவும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.
நெல்லை - திருச்செந்தூர் இடையே நாளை முதல் ரயில் போக்குவரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஆனால் உலக அளவில் கல்வித் துறை போட்டி நிறைந்ததாக உள்ளது. எனவே உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு இணையாக நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் சிறந்த திறனைப் பெறும் வகையில் நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் இருந்து மாணவர்கள் சேர்க்கை முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் சரி சமமாக சேரும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த ஓராண்டாக முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக மண்டல வாரியாக மொத்தம் 5 மண்டலங்களில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஏற்கெனவே மேற்கு மற்றும் வடக்கு மண்டலத்தில் மாநாடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மூன்றாவதாக தஞ்சாவூரில் தென் மண்டல மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 200-க்கும் அதிகமான துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர் என்றார்.