தமிழ்நாடு அரசு, ANSR Global நிறுவனத்துடன் ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல துறைகளில் 10,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், மாநில அரசு ANSR Global நிறுவனத்துடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டாண்மை, உலகளாவிய நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்கும் என அரசு நம்புகிறது. ANSR நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு திறன் மையங்களை அமைக்கும் துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிறுவனத்தின் உதவியுடன் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், வங்கி, நிதி, காப்பீடு, பொறியியல், விண்வெளி, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
உலகளாவிய போட்டியில் தமிழகம் சாதிக்கும்
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது அறிவிப்பில், அரசு வழங்கும் கொள்கை ஆதரவு, வேகமான ஒப்புதல்கள், தொழில் வசதிகள், திறமையான மனித வலு, நிலையான அரசியல் சூழல் ஆகியவை தமிழ்நாட்டை உலகளாவிய முதலீட்டாளர்களின் பிடித்த தளமாக மாற்றியுள்ளதாக கூறினார். இதனால் மாநிலம், திறன் மேம்பாட்டு மையங்களுக்கான உலகளாவிய போட்டியில் முக்கிய இடத்தை பிடிக்கும் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும்
தொழில்நுட்ப முன்னேற்றமும், வேலைவாய்ப்பு தேவையும் வேகமாக உயர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்த ஒத்துழைப்பு மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்று அரசு நம்புகிறது என குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, தொழில் பயிற்சி, உயர் சம்பள வேலை வாய்ப்புகள் ஆகியவை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்தா சந்தோஷம்தான்.


