திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN) 13 கற்பித்தல் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு, பட்டப்படிப்புவர்கள் ஜனவரி 21, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) வேலைவாய்ப்பு 2026
13 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நம்ப ஊர்லயே கைநிறைய சம்பளத்துடன் அரசு வேலை கிடைத்தால் அது 2 லட்டு திங்க ஆசையா என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 13 கற்பித்தல் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் தகுதியான பட்டதாரிகள் மற்றும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரங்கள் மற்றும் காலியிடங்கள் இதுதான்
செம்மயான இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் லோயர் டிவிஷன் கிளர்க் பதவிக்கு 5 இடங்களும், அப்பர் டிவிஷன் கிளர்க் பதவிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பெர்சனல் அசிஸ்டண்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (கம்ப்யூட்டர்), செமி புரொபஷனல் அசிஸ்டண்ட், லேபரட்டரி அசிஸ்டண்ட், ஹிந்தி டைப்பிஸ்ட் மற்றும் மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதியும் வயது வரம்பும்
MTS பணிக்கு: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI முடித்திருந்தால் போதுமானது. கிளர்க் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டப்படிப்புடன், கணினி இயக்கத் திறன் மற்றும் தட்டச்சுத் தகுதி அவசியமாகும். தொழில்நுட்பப் பணிகளுக்கு, கணினி அறிவியல் அல்லது பொறியியல் துறையில் பட்டம் மற்றும் உரிய அனுபவம் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு
பதவிகளைப் பொறுத்து 32 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விவரம்
உயர் பதவிகளான பெர்சனல் அசிஸ்டண்ட் மற்றும் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (கம்ப்யூட்டர்) ஆகியவற்றுக்கு ஊதிய நிலை 6-ன் படி, மாதந்தோறும் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். செமி புரொபஷனல் அசிஸ்டண்ட் பணிக்கு நிலை 5-ன் படி ரூ.29,200 முதல் ரூ.92,300 வரையிலும், மேல்நிலை எழுத்தர் (UDC) மற்றும் ஆய்வக உதவியாளர் பணிகளுக்கு நிலை 4-ன் படி ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தட்டச்சு எழுத்தர் (LDC) மற்றும் இந்தி தட்டச்சாளர் பணிகளுக்கு நிலை 2-ன் படி ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையிலும், அடிப்படைப் பணியான பல்நோக்கு பணியாளர் (MTS) பதவிக்கு நிலை 1-ன் கீழ் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரையிலும் சம்பளம் கிடைக்கும். இந்த அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து, மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டு அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகைப்படி போன்ற கூடுதல் படிகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ளவர்கள் https://cutn.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜனவரி 21, 2026 கடைசி நாளாகும். விண்ணப்பித்த பிறகு, அதன் நகலைத் தேவையான ஆவணங்களுடன் இணைத்துப் பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மத்திய அரசுப் பணியில் நிரந்தர அடிப்படையில் சேர விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் காலதாமதமின்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


