தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலைய வேலைகளுக்கான இலவச பயிற்சியை வழங்குகிறது. ஆறு மாத கால இந்த IATA அங்கீகாரம் பெற்ற பயிற்சியை முடிப்பவர்கள், முன்னணி விமான நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை பெறலாம்.

விமான நிலையத்தில் வேலை பெறும் பொற்கால வாய்ப்பு – தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி திட்டம்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு சர்வதேச விமான நிலையங்களில் வேலை செய்யும் அபூர்வ வாய்ப்பு திறந்து விட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான IATA–Canada அங்கீகரித்த சிறப்பு பயிற்சி திட்டங்களை இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் – திறமையான இளைஞர்களை விமானத் துறையில் நீடித்த வேலைவாய்ப்புடன் இணைப்பது.

ஆறு மாத கால பயிற்சி

இத்திட்டத்தின் கீழ் கேபின் க்ரூ, விமான நிலைய பயணிகள் சேவை, ஏர் கார்கோ அடிப்படை + DGR, கிரௌண்ட் சர்வீஸ் – ரிசர்வேஷன் & டிக்கட்டிங், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை அடிப்படை போன்ற பல துறைகளில் ஆறு மாத கால பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு விடுதி வசதி, கல்வி உபகரணங்கள், மற்றும் பயிற்சி கட்டணங்கள் அனைத்தும் தாட்கோவால் ஏற்றுக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

வயது வரம்பு இதுதான் மக்களே

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு IATA–Canada வழங்கும் சர்வதேச அங்கீகாரம் கொண்ட சான்றிதழ் கிடைக்கும். இந்தச் சான்றிதழின் மூலம் Indigo, Air India, SpiceJet, Go First போன்ற விமான நிறுவனங்கள், சரக்கு இறக்குமதி/ஏற்றுமதி நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், லக்ஷுரி கப்பல்கள், மற்றும் சுற்றுலா நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

சம்பளம் அப்பாடி எவ்ளோ தெரியுமா?

தொடக்கத்திலேயே ரூ.20,000 முதல் ரூ.22,000 வரை மாத சம்பளமாக பெறலாம். அனுபவம் மற்றும் திறமை அதிகரித்தாலும் ரூ.50,000 – ரூ.70,000 வரை உயரும் வருமான வாய்ப்பும் உள்ளது. இதுவரை தாட்கோ மூலமாக பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னணி தனியார் விமான மற்றும் சுற்றுலா நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளனர்.

இந்த பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் தாட்கோ அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com வழியாக ஆன்லைனில் பதிவு செய்யலாம். விமானத் துறையில் எதிர்காலம் பார்க்கும் இளைஞர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமே இல்லை!