AI Scholarship மத்திய அரசு, கூகுள் மற்றும் யூடியூப் இணைந்து வழங்கும் 15,000 AI உதவித்தொகை! படைப்பாற்றல் மிக்க மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு. 15,000 பேருக்கு இலவச ஸ்காலர்ஷிப்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கைத் தேவையாக மாறிவிட்டது. இதனை உணர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB), மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் (IICT) உடன் இணைந்து ஒரு மாபெரும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுடன் கைகோர்த்து, சுமார் 15,000 மாணவர்களுக்கு AI பயிற்சி மற்றும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் குறிப்பாக மீடியா, பொழுதுபோக்கு, அனிமேஷன், கேமிங் மற்றும் டிஜிட்டல் கதைசொல்லல் (Storytelling) ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் பயன்பெறலாம்? என்னென்ன கற்றுத் தரப்படும்?

இந்த "நேஷனல் AI ஸ்கில்லிங்" முன்முயற்சி, வேலைவாய்ப்பிற்குத் தயாராகும் மாணவர்களையும், இளம் தொழில் வல்லுநர்களையும் மையமாகக் கொண்டது. இதில் மாணவர்கள் வெறும் தியரி மட்டும் கற்காமல், நிஜ உலகப் பணிச்சூழலில் AI கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் நடைமுறையாகக் கற்பார்கள்.

குறிப்பாக, கூகுளின் 'கேரியர் சர்டிபிகேட்ஸ்' மற்றும் கூகுள் கிளவுட் மூலம் அடிப்படை AI கருத்துக்கள், பொறுப்பான AI பயன்பாடு மற்றும் உருவாக்கப்படும் AI (Generative AI) போன்ற நவீன நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படும்.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் பயிற்சி

இந்தத் திட்டம் மிகத் தெளிவாக இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது:

1. முதல் கட்டம்: தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் AI-ன் அடிப்படைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும்.

2. இரண்டாம் கட்டம்: முதற்கட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்கள், அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள். இதில் ஹேண்ட்ஸ்-ஆன் புராஜெக்ட்ஸ் (Hands-on projects), யூடியூப் தளத்தில் உள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் கூகுளின் உயர் ரக AI கருவிகளைப் பயன்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த இரண்டாம் கட்டப் பயிற்சியானது இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 'கிரியேட்டிவ் ஹப்களில்' நேரடி மற்றும் ஆன்லைன் என இரு முறைகளிலும் (Hybrid Mode) நடைபெறும்.

இந்தியாவின் 'ஆரஞ்சு எக்கனாமி' (Orange Economy)

2026-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், 'ஆரஞ்சு எக்கனாமி' எனப்படும் படைப்பாற்றல் சார்ந்த பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அனிமேஷன், கேமிங், டிஜிட்டல் கன்டென்ட் போன்ற துறைகளே இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்குத் தூணாக இருக்கும் என அரசு நம்புகிறது. அதற்குத் தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்கவே இந்த IICT, கூகுள் மற்றும் யூடியூப் கூட்டணி உருவாகியுள்ளது.

ஏற்கனவே IICT மற்றும் யூடியூப் இணைந்து வழங்கிய "Create with AI" என்ற திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இது தேசிய அளவிலான ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய இளைஞர்கள் உலகளாவிய டிஜிட்டல் சந்தையில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.