மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை. இன்றே விண்ணப்பிக்கவும்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் இ.ஆ,ப., அவர்கள், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி மற்றும் என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (BC, MBC, DNC) வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகை திட்டத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை இங்கு காணலாம்.

கல்வி உதவித்தொகை பற்றிய விரிவான தகவல்கள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ/மாணவியருக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணாக்கர்களின் கல்விக் கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் பிற கட்டாயக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றுக்கு, மாணவர்கள் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள்

2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு (Fresh and Renewal Application) தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5, அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெறலாம். மேலும், https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு

2025-2026 நிதியாண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை செப்டம்பர் 30, 2025-க்குள், புதிய (Fresh) விண்ணப்பங்களை அக்டோபர் 31, 2025-க்குள் பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரிகள்

பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு மாணவர்கள்:

• முகவரி: ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5.

• மின்னஞ்சல்: tngoviitscholarship@gmail.com.

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு மாணவர்கள்:

• முகவரி: ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5.

• மின்னஞ்சல்: mbcdncscholarship@gmail.com.