யமஹா நிறுவனம் Neo’s எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம். 

ஜப்பானை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான யமஹா Neo’s எலெக்டிர்க் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. ஏற்கனவே இந்த ஸ்கூட்டர் 2019 டோக்கியோ மோட்டார் விழாவில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து விரைவில் இந்த ஸ்கூட்டர் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

ஏற்கனவே யமஹா நிறுவனம் Neo’s பெயரில் 50சிசி ஸ்கூட்டரை தேர்வு செய்யப்பட்ட சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதன் புதிய எலெக்ட்ரிக் வெர்ஷன் பேட்டரி மாற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது. இது வழக்கமான இ ஸ்கூட்டர்களை விட வித்தியாசமானது ஆகும். வரும் வாரங்களில் இந்த ஸ்கூட்டரின் முழு அம்சங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

எனினும், புதிய யமஹா Neo's எலெக்ட்ரிக் மாடலின் செயல்திறன் வழக்கமான 50சிசி ஸ்கூட்டருக்கு இணையாக இருக்கும் என யமஹா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. தோற்றத்தில் யமஹா Neo's பார்க்க மிக அழகாகவும் ஸ்போர்ட் அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கிறது. 

இதில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டெலிஸ்கோபிக் ஃபோர்க், ஸ்விங் ஆம் மவுண்ட் செய்யப்பட்ட மோனோ ஷாக், அலாய் வீல்கள், முன்புறம் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டரின் இருக்கைகள் டிரைவர் மற்றும் பில்லியன் என இருவருக்கும் சவகரிய அனுபவத்தை வழங்கும் என்றே தெரிகிறது.

புதிய Neo's மட்டுமின்றி யமஹா நிறுவனம் E01 ப்ரோடோடைப் இ ஸ்கூட்டர் மாடலையும் அறிமுகம் செய்தது. இது மேக்சி ஸ்கூட்டர் போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் உயரமான வைசர், மெல்லிய டெயில் பகுதி, ஸ்கூப்டு சிங்கில் பீஸ் சீட், அலாய் வீல்கள் உள்ளன. மேலும் இந்த மாடலில் ஆல்-எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.