Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. லக்பதி தீதி திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம்

நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் 13.65 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் சம்பாதித்து வருகின்றன என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன

What is Lakhpati Didi Scheme how to apply what documents are required Rya
Author
First Published Feb 22, 2024, 10:32 AM IST

மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் ஆண்டுதோறும் ரூ. 1 லட்சம் வரை நிலையான வருமானம் பெறும் வகையில் பல்வேறு பயிற்சிகளை வழங்கும் திறன் மேம்பாட்டு திட்டம் தான் `லக்பதி தீதி திட்டம். இந்த திட்டத்தின் மூலம்  ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டும் பெண்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி உள்ளது என்று மத்திய ஊரக வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் லட்சாதிபதியாக மாறி உள்ளனர். 

அதன் படி நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் 13.65 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் சம்பாதித்து வருகின்றன என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆந்திராவை தொடர்ந்து பீகாரில் 11.6 லட்சம் பெண்களும், மேற்கு வங்கத்தில் 10.11 லட்சம் பெண்களும் லட்சாதிபதியாக உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 2.64 லட்சம் பெண்கள் லட்சாதிபதிகளாக உள்ளனர். 

நாட்டிலேயே குறைவான எண்ணிக்கை பெண்கள் லட்சாதிபதியாக உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தமான் நிகோபார், கோவா, லட்சத்தீவு ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதன்படி இதுவரை ஒரு பெண் கூட மகளிர் சுய உதவுக்குழுக்கள் மூலம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கவில்லை. அந்தமான் நிகோபாரில் 242 பேரும் கோவாவில் 206 பேரும் உள்ளனர். 

சமீபத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லட்சாதிபதி பெண்களின் இலக்கை அரசு உயர்த்தியுள்ளதாக அறிவித்தார். மேலும் "9 கோடி பெண்களைக் கொண்ட 83 லட்சம் சுய உதவிக்குழுக்கள் கிராமப்புற சமூக-பொருளாதார அமைப்பை மாற்றி வருகின்றன. இதன் மூலம் ஏற்கனவே கிட்டத்தட்ட 1 கோடி லட்சாதிபதியாக மாறி உள்ளனர்.  எனவே தற்போது லட்சாதிபதி பெண்களின் இலக்கு 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

லக்பதி தீதி திட்டம் என்றால் என்ன?

கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடியால் ‘லக்பதி திதி’ திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள 20 மில்லியன் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை அரசு அளிக்கும் என்று அறிவித்திருந்தார்.

லக்பதி திதி திட்டம் என்பது மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டமாகும், இது பெண்களை நிதி ரீதியாக சுதந்திரமாக ஆக்குவதற்காக கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் பெண்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலமும், தொழில்முனைவோரை நிலைநிறுத்துவதன் மூலமும், பெண்களின் நிதி நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு அரசு பல திறன் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் என்று கூறினார். மேலும், இந்த மகளிர் குழுக்கள் அனைத்தும் தொழில்முனைவோராகவும், இறுதியில் லட்சாதிபதிகளாகவும் அரசு நிதியுதவி அளிக்கும், என்று தெரிவித்தார்.

லக்பதி திதி திட்டம் : தேவையான ஆவணங்கள்

  • பான் கார்டு
  • வங்கி கணக்கு விவரங்கள்
  • வருமான சான்றிதழ்
  • ரேஷன் கார்டு

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு சுய உதவிக்குழு குடும்பமும் தங்கள் கிராமங்களில் குறுந்தொழில்களை அமைப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1 லட்சம் நிலையான வருமானத்தை ஈட்டுவதற்கு பல வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

எல்இடி பல்புகள் தயாரித்தல், பிளம்பிங் செய்தல், ஆளில்லா விமானம் பழுது பார்த்தல் போன்ற தொழில்நுட்பத் திறன்கள் பெண்களுக்கு கற்பிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் பல்வேறு சுயஉதவி குழுக்களில் சேரலாம். பயிற்சி குறித்து மேலும் தெரிந்து கொள்ள அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

லக்பதி திதி திட்டத்தின் தகுதி 

  • இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • அந்த பெண்ணின் குடும்பத்தில் எந்த உறுப்பினரும் அரசு வேலை செய்யக்கூடாது.

லக்பதி திதி திட்டத்தின் பலன்கள்

  • பெண்கள் சுயஉதவி குழுக்களுடன் இணைக்கப்பட்டு, எல்இடி விளக்குகள் தயாரித்தல், பிளம்பிங் செய்தல், ஆளில்லா விமானங்களை பழுது பார்த்தல் போன்ற துறைகளில் பயிற்சி பெற உதவும்.
  • இந்தத் திட்டம் 20000 புதிய பெண்களை சுயஉதவி குழுக்களில் சேர்ப்பதன் மூலம் அவர்களின் தொழிலை நிர்வகிக்கவும் தொடங்கவும் ஊக்குவிக்கிறது.
  • கிராமப்புற விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் ஒரு தொழில்நுட்ப மாற்றத்தைக் குறிக்கும் வகையில், நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காக மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்அள் ட்ரோன்களைப் பெறுவார்கள்.
  • சுமார் 15000 மகளிர் சுய உதவி பெண்கள் ட்ரோன் இயக்கம் மற்றும் பழுதுபார்க்கும் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
  • ட்ரோன்கள் நீர்ப்பாசனம் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதுடன் துல்லியமான விவசாய பயிர் கண்காணிப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
  • நிதி கல்வியறிவு பட்டறைகள், கடன் வசதிகள், காப்பீட்டுத் தொகை, திறமை மேம்பாடு, நிதிச் சலுகைகள் போன்ற பல்வேறு கூடுதல் நன்மைகளை இத்திட்டம் வழங்குகிறது.

லக்பதி திதி திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது

  • நீங்கள் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.
  • வீட்டுச் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழ், வங்கிக் கணக்குத் தகவல் மற்றும் மொபைல் எண் போன்ற அத்தியாவசிய ஆவணங்களைத் தயார் செய்யவும்.
  • மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தைப் பார்வையிடவும். அவர்கள் திட்டத்தைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதோடு, விண்ணப்ப செயல்முறையுடன் உங்களுக்கு சரியான வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள்.
  • லக்பதி திதி யோஜனாவுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று நிரப்பவும். அனைத்து தகவல்களும் முழுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும்.
  • பின்னர் விண்ணப்பப் படிவத்தை தேவையான அனைத்து ஆவணங்களுடன் நியமிக்கப்பட்ட அலுவலகத்திலோ அல்லது அங்கன்வாடி மையத்திலோ சமர்ப்பிக்கவும்.
  • சமர்ப்பித்த பிறகு, உங்கள் விண்ணப்பம் சரிபார்ப்பு செயல்முறைக்கு செல்லும். 
  • விண்ணப்பத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, நீங்கள் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். திட்டத்தின் தகவல்தொடர்பு செயல்முறையின்படி இது கடிதம், SMS அல்லது மின்னஞ்சல் மூலமாக இருக்கலாம்.
  • பின்னர் நிதி கல்வியறிவு பட்டறைகள் மற்றும் பிற பயிற்சி திட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
  • வெற்றிகரமான பதிவுக்குப் பிறகு, லக்பதி திதி யோஜனா வழங்கும் நிதி உதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற பலன்களைப் பெறலாம்.
Follow Us:
Download App:
  • android
  • ios