புதிய காம்பேக்ட் செடான் சர்வதேச வெளியீட்டை இந்தியாவில் நடத்த ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காம்பேக்ட் செடான் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் விர்டுஸ் என அழைக்கப்பட இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் சர்வதேச வெளியீடு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. புதிய விர்டுஸ் மாடலின் அறிமுக நிகழ்வு மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த செடான் மாடல் MQB A0 IN பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.
இதே பிளாட்ஃபார்மில் ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்படும் என தெரிகிறது. முன்னதாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட டைகுன் மாடலை போன்றே இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம் என தெரிகிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் மாடல் இரண்டு டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார்களாக இருக்கும் என தெரிகிறது. இதே என்ஜின் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் டைகுன் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய செடான் மாடலில் பல்வேறு ஆடம்பர மற்றும் சவுகரிய அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஸ்கோடா ஸ்லேவியா, ஹோண்டா சிட்டி மற்றும் இதர சில மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
