விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மேம்பட்ட எம்.ஜி. ZS EV மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 ZS EV மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக 2022 ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் டெஸ்ட் செய்யப்படும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மிக கவனமாக எந்த அம்சமும் தெரியாத வகையில் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில், எம்.ஜி. ZS EV ஃபேஸ்லிஃப்ட் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புதிய ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் எம்.ஜி. ஆஸ்டர் மாடலுக்கும் ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன. கடந்த அக்டோபர் முதல் விற்பனை செய்யப்பட்டு வரும் எம்.ஜி. ஆஸ்டர் மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

டேஷ்போர்டு பார்க்க ஆஸ்டர் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதில் புதிதாக 10.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது. இதை சுற்றி ஃபாக்ஸ் கார்பன் ஃபைபர் ட்ரிம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ADAS அம்சம், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ADAS சிஸ்டத்திற்கு ஆஸ்டர் மாடலில் உள்ளதை போன்ற கேமரா மற்றும் ரேடார் செட்டப் வழங்கப்படுகிறது.

ஸ்பை படங்களின் படி எம்.ஜி. ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர், ரியர் வியூ மிரர் உள்ளிட்டவைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரேடார் சென்சார்கள் விண்ட்ஷீல்டு நடுவில் உள்ளன. ஆஸ்டர் மாடலில் உள்ள ரோபோட் அசிஸ்டண்ட் ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படாது என்றே தெரிகிறது. இந்த மாடல் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இத்துடன் புதிய ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. 2022 எம்.ஜி. ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 51 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் 44.5 கிலோவாட் ஹவர் பேட்டரியே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் உள்ள பேட்டரி எவ்வளவு கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 

எம்.ஜி. ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய வேரியண்ட் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடலை போன்றே இருக்கும் என தெரிகிறது. புதிய ZS EV மாடலில் எலெக்ட்ரிக் திறன் தவிர பெரும்பாலான அம்சங்கள் எம்.ஜி. ஆஸ்டர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய ZS EV மாடலில் இண்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டே டைம் ரன்னிங் லைட்கள், எல்இ.டி. டெயில் லேம்ப்கள் ஆஸ்டர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. இந்தியாவில் புதிய ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 21.49 லட்சத்தில் துவங்கி ரூ. 25.18 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படசுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.