இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் திருப்புமுனையாக இருக்கும்: நிர்மலா சீதாராமன்
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) இந்தியாவிற்கும் உலக நாடுகளுக்கும் 'கேம் சேஞ்சராக' இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடமானது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் பெரிய மாற்றத்தை உருவாக்கும் திருப்புமுனையாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தனது இடைக்கால பட்ஜெட் உரையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) இந்தியாவிற்கு மூலோபாய மற்றும் பொருளாதார ரீதியாக 'கேம் சேஞ்சராக' இருக்கும் என்று கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் அடிப்படையைத் தீர்மானிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
“இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடமானது இந்தியாவிற்கு மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பிரதமர் மோடியின் வார்த்தைகளில் சொன்னால், இந்த வழித்தடம் இன்னும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் அடிப்படையாக மாறும். இந்த வழித்திடம் இந்திய மண்ணில் தொடங்கப்பட்டது என்பதை வரலாறு நினைவில் கொள்ளும்” என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லை... விவசாயிகளை ஏமாற்றியதா மத்திய பட்ஜெட்?
செப்டம்பர் 9-10 தேதிகளில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து புதிய பொருளாதார வழித்தடத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆசியா, மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே மேம்பட்ட வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி ஒருமித்த பொருளாதார வளர்ச்சிக்கு இந்த வழித்தடம் உத்வேகம் அளிக்கும் என்று கருதப்படுகிறது.
முன்னதாக செப்டம்பரில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78வது அமர்வில் உரையாற்றிய, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தைப் பாராட்டிப் பேசினார். இந்தத் திட்டம் இரண்டு கண்டங்களில் முதலீட்டிற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கும் என்று கூறினார்.
இத்திட்டம் மத்திய கிழக்கு நாடுகளுடன் மிகவும் நிலையான, ஒருங்கிணைந்த வர்த்தகத்தை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதி என்றும் ஜோ பிடன் கூறினார்.
லட்சத்தீவு உள்ளிட்ட தீவுகளில் சுற்றுலாவை மேம்படுத்த புதிய உள்கட்டமைப்பு வசதிகள்: நிர்மலா சீதாராமன்