இந்தியாவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட 59 சீன செயலிகளில் ஒன்றான டிக் டாக் நிறுவனம், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளது. 

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் கடந்த ஜூன் 15ம் தேதி அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பிறகு, இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் விழுந்துள்ளது. இந்திய அரசு, சீனாவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார கொள்கைகளில் பெரும் மாற்றத்தை முன்னெடுத்துள்ளது. 

சீனா பொருட்கள் இறக்குமதியை குறைப்பது, சீன நிறுவனங்களின் இந்திய முதலீடுகளை தவிர்ப்பது, சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு தடை என இந்திய அரசாங்கம், சீனாவுடனான வர்த்தக உறவை குறைக்க தொடங்கியுள்ளது. 

சீனாவுடன் ராணுவ மற்றும் வர்த்தக - பொருளாதார ரீதியாக என அனைத்து வகையிலும் இந்தியா கொள்கைகளை மாற்றி அதிரடி காட்டிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. டிக் டாக், ஹெலோ, ஷேர் இட், யுசி பிரவுசர் ஆகிய, பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்ட செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. 

இந்திய இறையாண்மைக்கு சவால் அளிக்கும் விதமாக இருப்பதாலும், அந்த செயலிகளை பயன்படுத்தும் இந்தியர்களின் தகவல்களை பாதுகாப்பதற்காகவும் 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில், இந்திய அரசு விதித்த தடையை சட்ட ரீதியாக டிக் டாக் நிறுவனம் சந்திக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவிவந்தது. இந்நிலையில், அந்த தகவல் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் டிக் டாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து டிக் டாக் வெளியிட்ட அறிவிப்பில், இந்திய அரசு விதித்த தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்போவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அது உண்மையில்லை. சட்டரீதியாக அணுகும் திட்டமில்லை. இந்திய அரசாங்கத்துடன் இணைந்து, அரசின் கருத்துகளை ஏற்று அதன்படி செயல்படுவதில் உறுதியாக இருக்கிறோம். இந்திய அரசின் சட்டங்களுக்கு இணங்கித்தான் செயல்பட்டோம். டிக் டாக் பயனாளர்களின் தகவல்களை இதுவரை பாதுகாத்திருக்கிறோம்; இனிமேலும் பாதுகாப்போம். எங்கள் பயனாளர்கள் தான் எங்களுக்கு முக்கியம் என்று டிக் டாக் தெரிவித்துள்ளது.