மஹிந்திரா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கான்செப்ட் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் மற்றும் நான்கு ஹைப்ரிட் மாடல்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு மே மாத வாக்கில் அறிவித்தது. இந்த நிலையில், மூன்று எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல்களுக்கான டீசரை மஹிந்திரா வெளியிட்டு உள்ளது. 

Born Electric Vision என அழைக்கப்படும் மூன்று எலெக்ட்ரிக் கான்செப்ட்கள் ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இவை இங்கிலாந்தில் உள்ள மஹிந்திரா அட்வான்ஸ்டு டிசைன் ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த ஸ்டூடியோவில் உலகளாவிய டிசைனர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு இடம்பெற்றுள்ளனர். 

புதிய மாடல்கள் பற்றி மஹிந்திரா எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. எனினும், இவை காம்பேக்ட் எஸ்.யு.வி., கூப் மற்றும் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல்களாக இருக்கும் என தெரிகிறது. இவை அனைத்தும் பி-ஸ்போக் EV பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 

இந்த ஆண்டு ஜூலை மாதம் கான்செப்ட் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டதும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இவற்றின் ப்ரோடக்‌ஷன் ரெடி மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக XUV100, XUV400 மற்றும் XUV900 போன்ற பெயர்களை வாகனங்களில் பயன்படுத்த மஹிந்திரா டிரேட்மார்க் வழங்க கோரி விண்ணப்பித்து இருந்ததாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தகவல்கள் வெளியாகின.