டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் டார்க் எடிஷன் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் டார்க் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் புது டார்க் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டார்க் எடிஷன் அப்டேட் அல்ட்ரோஸ் XT வேரியண்டில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய அல்ட்ரோஸ் டார்க் எடிஷன் விலை ரூ. 7.96 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி டாப் எண்ட் டார்க் XZ+ மாடலையும் டாடா மோட்டார்ஸ் அப்டேட் செய்து இருக்கிறது.
டாடா அல்ட்ரோஸ் XT டார்க் எடிஷன் மாடலின் விலை அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 46 ஆயிரம் அதிகம் ஆகும். இதற்கு புதிய அல்ட்ரோஸ் மாடல் காஸ்மோ டார்க் பெயிண்ட் செய்யப்பட்டு டார்க் டிண்ட் ஹைப்பர்ஸ்டைல் வீல்கள், வெளிப்புறம் "dark" பேட்ஜிங், உள்புறம் ஆல்-பிளாக் இண்டீரியர், பெர்ஃபோரேட் செய்யப்பட்ட லெதர் இருக்கைகள், டிரைவர் சீட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் லீவர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய அல்ட்ரோஸ் XT டார்க் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை 86 பி.ஹெச்.பி. மற்றும் 110 பி.ஹெச்.பி. திறன் வழங்குகின்றன. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
டாடா அல்ட்ரோஸ் XZ+ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த வேரியண்ட் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய டீசல் வேரியண்ட் விலையை டாடா மோட்டார்ஸ் இதுவரை அறிவிக்கவில்லை. புது என்ஜின் மட்டுமின்றி பிரேக் ஸ்வே கண்ட்ரோல் மற்றும் டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் டாடா அல்ட்ரோஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய பலேனோ, ஹூண்டாய் ஐ20, ஹோண்டா ஜாஸ், டொயோட்டா கிளான்சா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
