மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு தமிழ்நாடு அரசு பிணையம் இல்லாமல் ரூ.10 லட்சம் கடன் வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என பார்க்கலாம்.

Tamil Nadu Govt Provide Rs.10 lakh Loan To Women: தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை, பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், பணிபுரியும் பெண்களுக்கு தோழிகள் விடுதி என சிறப்பான திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் 2025-26 ஆண்டிற்கு கிராமப்புற சுய உதவிக் குழு பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு வங்கிக் கடன்

இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ''ஊரக வாழ்வாதார இயக்கமானது. திருப்பத்தூர் தமிழ்நாடு மாநில மாவட்டத்திலுள்ள தகுதியான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கி. குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புகள் ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு சுய உதவிக் குழுவின் பெண் உறுப்பினர்களும், சொந்தமாக தொழில் புரிந்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும். தேவைப்படும் கடன் தேவைகளை, வங்கிகளிலிருந்து எளிதில் பெற்றிடவும் உதவிடும் வகையில் பெண்கள் தலைமையிலான (Women Led Enterprises) தொழில்களுக்கு பிரத்யேக கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்

இத்திட்டத்தின் கீழ் நிலையான முதலீடு (Term Loan) அல்லது நிலையான முதலீடும். நடைமுறை முதலீடும்(Working Capital) இணைந்த இருவகையான கடன்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். பிணையம் எதுவும் இன்றி ரூ.75,000/- முதல் ரூ.10 லட்சம் வரை, வேளாண் சார்ந்த மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள்உற்பத்தி சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு CGTMSE/CGFMJ என்ற கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. CGTMSE/CGFMU திட்டங்களின் கீழ் வங்கிகள் தாங்கள் வழங்கும் கடனுக்கான இச்சேவைக்கான கட்டணம் கடன் வாங்குபவர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

வட்டி மானியம் உண்டு

வங்கிகள் வழங்கிய கடன் தொகையை தவணை தவறாமல் உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் பெண் தொழில் முனைவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியில் 2% மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு. 5 ஆண்டுகள் வரை, பயனாளியிடமிருந்து வங்கிகள் வசூல் செய்யும் CGTMSE/CGEMU என்ற கடன் உத்தரவாதக் கட்டணங்களைத் திரும்ப பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. (மேற்கூறிய சலுகைள் ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்)

இத்திட்டத்தில் பயன்பெற என்ன தகுதிகள் வேன்டும்?

* ஏற்கனவே தொழில் முனைபவராக இருக்க வேண்டும்.

* 21 வயதிற்கு மேற்பட்ட கிராமப்புற சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்.

* அவர் சார்ந்திருக்கும் குழு ஆரம்பிக்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

* அக்குழு ஒரு வங்கிக் கடனைப் பெற்று வெற்றிகரமாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.

* கடன் பெற விரும்புபவர் குழுவில் சேர்ந்து குறைந்த பட்சம் 2 வருடங்களாவது ஆகியிருப்பதுடன் ஒரு கடன் சுழற்சியையாவது வெற்றிகரமாகப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள் என்னனென்ன?

பண்ணை தொடர்பான உற்பத்தி தொழில்களுக்கு, ஆதார் அட்டையின் நகல், ரேஷன் அட்டையின் நகல், வங்கி பாஸ் புத்தகத்தின் நகல், விற்பனையாளர் பற்றிய விபரம். சுய உதவிக்குழுவின் தீர்மானம், ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கான அத்தாட்சி. பண்ணை சாராத தொழில்களுக்கு, ஆதார் அட்டையின் நகல் ரேஷன் அட்டையின் நகல், வங்கி பாஸ் புத்தகத்தின் நகல், பான் அட்டையின் நகல், சுய உதவிக்குழுவின் தீர்மானம், உதயம் / FSSAI / GST பதிவின் நகல், மூலப்பொருட்கள் / இயந்திரங்களுக்கான விலைப்புள்ளி.

இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்கு தகுதியான தங்களின் சிறந்த செயல்பாடுகளுக்கான சான்றுகள், அறிக்கைகள். புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் கொண்ட விண்ணப்பங்களை 08.08.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் சம்மந்தப்பட்ட வட்டாரத்தின் மகளிர் திட்ட அலுவலகம் அல்லது திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, 3ம் தளம் C பிரிவு, மாவட்ட ஆட்சியரகம். திருப்பத்தூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.