ஸ்விஸ் வங்கியில் வெளிநாட்டினர் வைத்திருக்கும் தொகையில் இந்தியாவின் பங்கு, தொடர்ந்து குறைந்துவருகிறது. கடந்த ஆண்டு இறுதியின் நிலவரப்படி, ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகையின் அடிப்படையில் அந்த வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளது. 

ஸ்விஸ் வங்கியில் உலகின் பெரும்பாலான நாட்டினர், வங்கிக்கணக்கு வைத்திருக்கின்றனர். அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் என பல நாடுகளை சேர்ந்த தனி நபர்களும் நிறுவனங்களும் ஸ்விஸ் வங்கியில் பணத்தை போட்டிருக்கின்றனர். 

ஸ்விஸ் வங்கியில் வெளிநாட்டினர் வைத்திருக்கும் மொத்த தொகையின் அடிப்படையில், நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஸ்விஸ் வங்கி வெளியிட்டுவருகிறது. அந்தவகையில், 2019ம் ஆண்டின் இறுதியில் ஸ்விஸ் வங்கியில் இருக்கும் தொகையின் அடிப்படையில், நாடுகளின் பட்டியலை ஸ்விஸ் வங்கி வெளியிட்டுள்ளது. 

கடந்த முறை இந்த பட்டியலில் 74வது இடத்தில் இருந்த இந்தியா, இம்முறை மூன்று இடங்கள் பின் தங்கி 77வது இடத்தில் உள்ளது. ரூ.6625 கோடியை இந்தியர்கள் ஸ்விஸ் வங்கியில் போட்டு வைத்துள்ளனர். இது கடந்த ஆண்டில்(2019) ஸ்விஸ் வங்கியின் கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் வெறும் 0.06% மட்டுமே. 2015ம் ஆண்டு இந்தியர்களின் ரூ.12615 கோடி(0.123%) பணம் ஸ்விஸ் வங்கியில் இருந்தது. அந்த ஆண்டில் இந்த பட்டியலில் 61வது இடத்தில் இருந்தது இந்தியா. அதற்கு முந்தைய ஆண்டின் இந்தியர்களின் சேமிப்பு தொகையை விட அது 10% குறைவு. அதன்பின்னர் 2016, 2017, 2018 என தொடர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவந்தது இந்த தொகை.

2014-15ல் ஸ்விஸ் வங்கியில் இருந்த இந்தியர்களின் சேமிப்பு தொகையில், பாதி தொகை தான் இப்போது இருக்கிறது. ஸ்விஸ் வங்கியில் அதிகமான பணத்தை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் வழக்கம்போலவே பிரிட்டன் தான் முதலிடத்தில் இருக்கிறது. ஸ்விஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் மொத்த தொகையில் 27% பங்கு பிரிட்டனுடையது. 

பிரிட்டனுக்கு அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஃப்ரான்ஸ் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த 5 நாடுகள் தான் ஸ்விஸ் வங்கியில் அதிக தொகை வைத்திருப்பவர்களை அதிமாக பெற்றிருக்கும் டாப் 5 நாடுகள்.