சர்வதேச சூழல்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மும்பை மற்றும் தேசியப்பங்குச் சந்தைகள் இன்று சரிவில் முடிந்தன. முதலீட்டாளர்களுக்கு கடந்த 3 நாட்களில் மட்டும் ஏறக்குறைய ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சூழல்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மும்பை மற்றும் தேசியப்பங்குச் சந்தைகள் இன்று சரிவில் முடிந்தன. முதலீட்டாளர்களுக்கு கடந்த 3 நாட்களில் மட்டும் ஏறக்குறைய ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே கடும் சரிவு காணப்பட்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 1,346 புள்ளிகள் வரை இறங்கியது. சர்வதேச சூழல் அச்சம் காரணாக முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்தனர், வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் முதலீட்டை தொடர்ந்து எடுத்துவந்ததால், சந்தையில் பெரும் ஊசலாட்டமான சூழல் நிலவியது.
வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,024 புள்ளிகள் அல்லது 1.75% சரிந்து 57,621 புள்ளிகளில் முடிந்தது. தேசியப்பங்குச்சந்தையான நிப்டி, வர்த்தகத்தின்இடையே 17,150 புள்ளிகள்வரை இறங்கியது, ஆனால், வர்த்தகம் முடிவில் 303 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 1.75% 17,214 புள்ளிகளில் நிலை கொண்டது.
சரிவுக்கு காரணம் என்ன
அமெரிக்க ஃபெடரல் வங்கி உள்ளிட்ட பல்ேவறு நாடுகளும் வங்கிக்கடனுக்கான வட்டியை உயர்த்தும் என்ற அச்சம், அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப்பெற்றது, தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய்விலை, ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம், அமெரிக்க வேலைவாய்ப்பு விவரங்கள், இந்தியப் பங்குசந்தைகள் சரிவுக்கு காரணமாக அமைந்தன.
அதுமட்டுமல்லாமல் உக்ரைனுக்குள் எப்போது வேண்டுமானாலும் ரஷியா நுழையலாம் என்ற பதற்றம்,அவ்வாறு ஏதேனும் நடந்தால், கச்சா எண்ணெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு கடும் விலை ஏற்றத்தைச்சந்திக்கலாம் என்பதால், முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து 4 நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து ரூ.6,834 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர், இவையெல்லாம் சேர்ந்து பங்குச்சந்தையை சரிவில் தள்ளின.
கடந்த 3 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.6.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2ம்தேதி பிஎஸ்இ சந்தையின் மதிப்பு ரூ.270 லட்சம் கோடியாக இருந்த நிலையில் இன்று அதன் மதிப்பு ரூ.263.76 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது.
யாருக்கு நஷ்டம்

லார்ஸன் அன்ட் டூப்ரோ நிறுவனப் பங்குகள் 3.6% இழப்பைச்சந்தித்தன. அதைத்தொடர்ந்து ஹெச்டிஎப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், கோடக் வங்கி, டைட்டான், ஐசிஐசிஐ வங்கி,அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், உஜ்ஜீவன் பைனான்சியல் சர்வீஸ், பார்தி ஏர்டெல், இந்துஸ்தான் யுனலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், விப்ரோ, ஐடிசி,நெஸ்டில் இந்தியா உள்ளிட்ட பங்குகள் சரிவில் முடிந்தன.
யாருக்கு லாபம்
மாறாக, பவர் கிரிட், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, என்டிபிசி, அல்ட்ராடெக் சிமென்ட், அதானி பவர், பேங்க் ஆப் இந்தியா, எவரிடே நிறுவனங்களின் ஆகிய பங்குகள் மட்டுமே ஓரளவுக்கு லாபமீட்டின.
