small savings interest: பிபிஎப், தேசிய மூத்தகுடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், செல்வமகள் சேமிப்பு உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டிவீதம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிபிஎப், தேசிய மூத்தகுடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், செல்வமகள் சேமிப்பு உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டிவீதம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிறுசேமிப்பு
ஏப்ரல்1-ம் தேதி முதல் 2022-23 நிதியாண்டு பிறந்துள்ளதையடுத்து ஏப்ரல் முதல் ஜூன்30வரையிலான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறித்த அறிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு கடந்த நிதியாண்டின் 4-வதுகாலாண்டில் தொடர்ந்த அதே வட்டி வீதம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

பிஎப் வட்டி குறைப்பு
சமீபத்தில் தொழிலாளர் பிஎப் கணக்கிற்கு வழங்கப்பட்டுவந்த 8.50 சதவீத வட்டியை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு 8.10 சதவீதமாக மத்திய அரசு குறைந்தது. நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப குறைத்ததாக விளக்கம் அளி்க்கப்பட்டது.
அதேபோன்று சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியையும் மத்தியஅரசு குறைத்துவிடும்அச்சம் நடுத்தரக் குடும்பத்தினர், சாமானியர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், வட்டிவீதம் ஏதும் மாற்றப்படாததையடுத்து, மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வட்டிவீதத்தில் மாற்றமில்லை
இதுகுறித்து மத்திய பொருளாதார விவகாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் “ 2022-23ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. 2022ஜனவரி 1முதல் மார்ச் 31வரையிலான 4-வது காலாண்டில் கடைபிடிக்கப்பட்ட அதேவட்டிவீதம் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

வட்டிவீதம் என்ன
இதன்படி தேசிய சேமிப்புப் பத்திரத்துக்கான வட்டி 6.8 சதவீதம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டத்துக்கு 7.4 சதவீதம், பிபிஎப் திட்டத்துக்கு 7.1 சதவீதம், கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 6.9 சதவீதம் வட்டி , செல்வமகள்(சுகன்யா சம்ரிதி) சேமிப்புத்திட்டத்துக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
அஞ்சலகங்களில் 5 ஆண்டுக்கு வைக்கப்பட்டுள்ள டெபாசிட்களுக்கு வட்டி 6.7 சதவீதம் தொடரும், மாத வருமானத் திட்டத்துக்கு வட்டி 6.6 சதவீதமாகவும், 5 ஆண்டுக்கான ரெக்கரிங் டெபாசிட்களுக்கு வட்டி 5.8 சதவீதமும் தொடரும்.

பின்வாங்கிய அரசு
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி மத்திய அரசு வெளியிட்டஅறிவிப்பில், சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைத்து அறிவித்தது. ஆனால், கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, சிலமணிநேரத்தில் அந்த அறிவிப்பை நிதிஅமைச்சகம் வாபஸ் பெற்றது. அதுமட்டுமல்லாமல் அந்தநேரத்தில் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் நடக்க இருந்ததால், உடனடியாக வட்டிக்குறைப்பு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
