முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்க வகையில் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மேம்படுத்தப்பட இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மேம்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்கூட்டரில் சக்திவாய்ந்த மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பான செயல்திறன், தெர்மல் மேனேஜ்மெண்ட் பெற்று இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் செயல்திறன் தற்போது 72 நியூட்டன் மீட்டர் டார்க் ஆக அதிகரித்து இருக்கிறது.
சிம்பில் ஒன் மோட்டார் தற்போது 8.5 கிலோவாட் மற்றும் 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் ஒரு பேட்டரியில் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 236 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் விலை ரூ. 1.09 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். 2 பேட்டரிகள் கொண்ட மாடல் முழு சார்ஜ் செய்தால் 300-க்கும் அதிக கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

இரண்டு பேட்டரிகள் கொண்ட சிம்பில் ஒன் ஸ்கூட்டர் விலை ரூ. 1.45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஆப்ஷன் இந்த பிரிவு வாகனங்களில் அதிக ரேன்ஜ் வழங்கும் மாடலாக அமைந்துள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 2.85 நொடிகளில் எட்டிவிடும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் ஜூன் மாத வாக்கில் துவங்கும் என சிம்பில் எனர்ஜி தெரிவித்து உள்ளது. இந்திய சந்தையில் சிம்பில் ஒன் மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இந்த ஸ்கூட்டரை வாங்க சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என சிம்பில் எனர்ஜி தெரிவித்து உள்ளது.
