share market today:சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைந்துவருவது போன்ற காரணங்களால் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி ஏற்றத்துடன் இன்று காலை வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பது, கச்சா எண்ணெய் விலை குறைந்துவருவது போன்ற காரணங்களால் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ், தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி ஏற்றத்துடன் இன்று காலை வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
ரஷ்யா உக்ரைன் இடையிலான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தாலும், போர் இனிமேல் தீவிரமடைவதற்கு வாய்ப்புகள் குறைவு என்ற தகவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 5 டாலர் குறைந்தது, அமெரிக்கா தனது இருப்பிலிருந்து கச்சா எண்ணெயை வெளியிட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது போன்ற சர்வதேச காரணிகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தன.

அதுமட்டுமல்லாமல் அன்னிய நேரடி முதலீட்டாளர்கள், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கடந்த இரு நாட்களாக அதிகமாக முதலீடு செய்துவருவதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. வர்த்தகம் நேற்று முடிவில் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தை முடித்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கும்முன்பே மும்பை பங்குச்சந்தை, தேசியப்பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்தன. வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் அதிகரித்து, 58,789 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 34 புள்ளிகள் உயர்ந்து, 17,532 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 பங்குகளில் 25 பங்குகள் லாபத்தில் செல்கின்றன, பவர்கிரிட், ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ், பஜாஜ்பின்சர்வ், இன்போசிஸ் ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன.

மும்பைப் பங்குச்சந்தையி்ல ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் பைனாஸ் ஆகிய வங்குகள் லாபத்தில் செல்கின்றன.
நிப்டியில் ஆட்டோமொபைல், உலோகம், ஊடகம், எப்எம்சிஜி, நிதிச்சேவை ஆகிய துறைகளின் பங்குகள் லாபத்தில் செல்கின்றன. பொதுத்துறை வங்கி, ரியல்எஸ்டேட்,மருந்துத்துறை பங்குகள் சரிவில் உள்ளன.
ஜியோஜித் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் விஜய குமார் கூறுகையில் “ போரால் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவு தற்காலிகம் என்பது தெரிந்துவிட்டது, ஆனால், உறுதியற்ற தன்மைகள் மட்டும் நீடிக்கின்றன.

சந்தையின் பார்வையில், இரு அம்சங்கள் ஆதரவாக இருக்கின்றன,டாலர் குறியீடு 99லிருந்து 97.7 ஆகக் குறைந்துவிட்டது இது சர்வதேச அளவில் சாதகமான போக்கை சந்தையில் ஏற்படுத்தியுள்ளது. 2-வதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குசந்தைகளில் பங்குகளை வாங்கத் தொடங்கியதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெயை வெளியிடுகிறது என்ற தகவலும் ஆறுதல் அளி்த்துள்ளது” எனத் தெரிவித்தார்
