Share market today: மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கினாலும் பிற்பகலுக்குபின் சரிவிலிருந்து மீண்டு உயர்வுடன் முடிந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கினாலும் பிற்பகலுக்குபின் சரிவிலிருந்து மீண்டு உயர்வுடன் முடிந்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.
கடந்த வாரத்தின்கடைசி வர்த்தக நாளிலும் சரிவுடன் முடிந்த தேசிய, மும்பைப் பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகம் தொடங்கியபின்பும் சரிவில்தான் இருந்தது. ஆனால் பிற்பகலில் ஐடிசி பங்குகள், சில தனியார் வங்கிப்பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகமாக வாங்கியதால், சந்தையில் எழுச்சி காணப்பட்டது.

மீட்சிக்கு காரணம் என்ன
பங்குச்சந்தை சரிவிலிருந்து மீண்டது குறித்து ஜியோஜித் முதலீட்டு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் விஜயகுமார் கூறுகையில் “ உக்ரைன்-ரஷ்யா போர் இந்தியசந்தைகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த பாதிப்பும் இல்லை. இ்ப்போது அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை இந்த ஆண்டு 190 புள்ளிகள்வரை உயர்த்தும் எனத் தகவல் வந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
உள்நாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் அதிகமான பங்களிப்பு செய்தது சந்தையில் உயர்வுக்கு காரணமாகும்.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச விமானப் போக்குவரத்து எந்தவிதமான கட்டுப்பாடுகின்றி தொடங்கியுள்ளது. இதன் மூலம் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வளர்ச்சி அடையும், பொருளாதாரம் வேகமெடுக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள்.

ரிசர்வ் வங்கி ஆதரவு
தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆதரவு அளிக்கும் என்று கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் வரும் நிதிக்கொள்கையிலும் வட்டிவீதம் உயர்த்தப்படாது என்பது தெரிகிறது.
ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தவாரம் இந்தியாவுக்கு வருகிறார். இந்தியாவுடன் எண்ணெய் ஏற்றுமதி தொடர்பாக இருதரப்பு நாடுகளும் பேச்சு நடத்துகிறார்கள். இருதரப்பு நாடுகளும் ரூபாய்-ரூபிள் மூலம் வர்த்தகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். இந்தத் தகவலும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்தது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தைக்கான அறிகுறிகளும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான மனநிலையை ஏற்படுத்தியதால் பங்குச்சந்தையில் பிற்பகலுக்குபின் உயர்வு காணப்பட்டது” எனத் தெரிவி்த்தார்.

ஏற்றம்
வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 229 புள்ளிகள் உயர்ந்து, 57,591 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தகம் தொடக்கத்தில் 500 புள்ளிகள்வரை இழந்து பிற்பகலுக்குப் பின்னர் 800புள்ளிகள்வரை மீண்டுள்ளது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 69 புள்ளிகள் ஏற்றம் கண்டு,17,222 புள்ளிகளில் நிலைபெற்றது.

லாபம்
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 18 பங்குகள் லாபத்தில் வர்த்தகத்தை முடித்தன. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய பங்குகள் அதிகபட்ச லாமடைந்தன. இதுதவிர பார்தி ஏர்டெல், ஐடிசி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப் பங்குகளும் லாபமடைந்தன.
ஆனால், டாக்டர்ரெட்டீஸ்,ஹெச்டிஎப்சி, நெஸ்ட்லே, ஹெச்சிஎல், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஹெச்டிஎப்சி பங்குகள் சரிவில் முடிந்தன.
