share market today: சர்வதேச காரணிகள், அமெரிக்க பெட் வங்கியின் அறிவிப்பு ஆகியவற்றால், மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து 2-வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்தது.
சர்வதேச காரணிகள், அமெரிக்க பெட் வங்கியின் அறிவிப்பு ஆகியவற்றால், மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து 2-வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்தது.
சரிவுக்கு காரணங்கள்
அமெரிக்க பெடரல் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் வரும் மே மாதத்தில் இருந்து எடுக்கப்படும், வட்டிவீதம் அதிகரிக்கப்படும் என்று அறிவித்தது. இது சர்வதேச சந்தையில் உள்ள முதலீட்டாளர்களுக்கும், சர்வதேச பங்குச்சந்தைக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்யா மீது மேலும் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்தியநாடுகள் ஆலோசித்து வருகின்றன. அவ்வாறு விதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் ஏற்றுமதி கடினமாகும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சினார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நடக்க உள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துமா என்ற அச்சம்முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.
மேலும், சீனாவில் கொரோனா தொற்று குறையாமல் அடுத்தடுத்த மாகாணங்களுக்கும் பரவுவது, லாக்டவுடன் தொடர்ந்து விதிப்பதும் முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. இந்த காரணங்களால், ஆசியப் பங்குச்சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது. ஜப்பானின் நிக்கி 1.5%, தென் கொரியப் பங்குச்சந்தை 0.8%, ஆஸ்திரேலியப் பங்குச்சந்தை1.2% சரிந்தன. சீனப் பங்குச்சந்தை இருநாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று காலை தொடங்கியதிலிருந்து ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது.

தொடக்கம் சரிவு
இந்த காரணிகள் இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதால், சென்செக்ஸ் 450 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது, நிப்டி 17,807 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. இந்த சரிவு வர்த்தகம் முடியும் வரை நீடித்தது.
வீழ்ச்சி
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 566 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 59,610 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 149 புள்ளிகள் சரிந்து, 17,807 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 6 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன. என்டிசிபி பங்குகள் அதிகபட்சமாக 3.5 சதவீதமும், பவர்கிரிட் 1.6 சதவீதமும், டாடா ஸ்டீல் 2 சதவீதமும் வளர்ச்சி அடைந்தன. ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப் வங்கி பங்குகள் மோசமான வீழ்ச்சி அடைந்து 2 சதவீதம் இழப்பில் முடிந்தன. டெக் மகிந்திரா, ஹெச்சிஎல், இன்போசிஸ் நிறுவனப்பங்குகளும் சரிவில் முடிந்தன.
தேசியப் பங்குச்சந்தையில்பொதுத்துறை வங்கி, உலோடம், கட்டுமானத்துறை, மின்சாரம், ஆகிய துறைகளின் பங்குகள் ஏற்றமடைந்தன. மாறாக, எப்எம்சிஜி, தகவல் தொழில்நுட்பம், மருந்துத்துறை, வங்கித்துறை பங்குகள் சரிவில் முடிந்தன
