Share market today: மும்பை பங்குச்சந்தை, தேசியப்பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சர்வதேச சூழலைப் பார்த்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அச்சப்படுவதால், சந்தையில் மந்தமான போக்கு காணப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தை, தேசியப்பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சர்வதேச சூழலைப் பார்த்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அச்சப்படுவதால், சந்தையில் மந்தமான போக்கு காணப்படுகிறது.

ரஷ்யா உக்ரைன் போர்

உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. போர் விரைவில் முடிந்துவிடும், பொருளாதாரம் இயல்பு சூழலுக்கு வரும் என எதிர்பார்த்த முதலீட்டாளர்களுக்கு உக்ரைன் நிலைப்பாடும், ரஷ்யாவின் நிலைப்பாடும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

பொருளாதாரத் தடை

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை மேலும் வலுப்பெறக்கூடும். ஐரோப்பிய யூனியன் இன்றும், நாளையும் கூடி ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பிப்பது குறித்து ஆலோசிக்க இருக்கிறது. இதனால் சந்தையில் முதலீட்டாளர்கள் உலகச் சூழலை கூர்ந்து உற்றுநோக்கி வருகிறார்கள்.

விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகிறார்கள். அமெரிக்கப் பங்குச்சந்தை, ஆசியப்பங்குச்சந்தையிலும் மந்தமானப் போக்கும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைத் தரவில்லை. இதனால் காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யவரவில்லை.

எண்ணெய் எரிவாயு பங்குகள், நிலக்கரி, தகவல்தொழில்நுட்பப் பங்குகள், மருந்துத்துறை ஆகியவற்றில் மட்டுமே ஓரளவுக்கு முதலீடு செய்து லாபம் பார்க்க முதலீட்டாளர்கள் முயல்கிறார்கள். இதனால் மற்ற துறைப்பங்குகள் பெருத்த சரிவை நோக்கி நகர்கின்றன.

சரிவு

மும்பைப் பங்குச்சந்தையில் காலையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி, 57,825 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்திவருகிறது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 117 புள்ளிகள் குறைந்து, 17,128 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது.

உலோகம், எண்ணெய் உயர்வு

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் டிசிஎஸ், டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ், ஹெச்சிஎல், அல்ட்ராடெக், விப்ரோ, என்டிபிசி, இன்போசிஸ் பங்குகள் மட்டும் லாபத்தில் செல்கின்றன. மற்ற துறைப்பங்குகள் அனைத்தும் சரிவை நோக்கி நகர்கின்றன.

வீழ்ச்சி

நிப்டியில் ஊடகம், தகவல்தொழில்நுட்பம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளின் பங்குகள் லாபத்தில் நகர்கின்றன. வங்கித்துறை பங்குகள் மோசமாகச் சரிந்து வருகிறது. ஆட்டமொபைல், எப்எம்சிஜி, தனியார் வங்கி, பொதுத்துறை வங்கி, ரியல்எஸ்டேட், மருந்துத்துறை ஆகிய துறைகளின் பங்குகளும் சரிவில் உள்ளன