share market today: ரஷ்யா உக்ரைன் போர், சர்வதேச காரணிகளால் மும்பை, இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை படுவீழ்ச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

ரஷ்யா உக்ரைன் போர், சர்வதேச காரணிகளால் மும்பை, இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை படுவீழ்ச்சியுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.உள்நாட்டு சந்தை நிலவரம், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், மொத்தவிலைப் பணவீக்கம் புள்ளிவிவரங்கள் ஆகியவை சந்தையின்சரிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இன்னும் தீவிரமடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன, பேச்சுக்கு வார்த்தைக்கு இடமில்லை என்பது தெளிவாகிவிட்டது. இதனால் இனிவரும் நாட்களில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும், கச்சா எண்ணெய் விலை அதிகரி்க்கும், உலகளவில் பொருளதார வளர்ச்சி குறையும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகிறார்கள்.

மொத்தவிலைப் பணவீக்கம்

இந்தியாவில் ஏற்கெனவே மார்ச் மாத சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தைக் கடந்து 3 மாதங்களாக சென்றுவருகிறது. அதிலும் கடந்த மாதம் 6.95 என்ற சதவீதத்தை எட்டியது.

 இதற்கிடையே மொத்தவிலைப் பணவீக்கம் புள்ளிவிவரங்கள் இன்று வெளியாக உள்ளன. கடந்த 6 மாதங்களாக மொத்தவிலைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் சென்றநிலையில், கடந்த மார்ச் மாதத்திலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலாண்டு முடிவு

இது தவிர ஹெச்டிஎப்சி, இன்போசிஸ் ஆகியவற்றின் 4-வது காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கில் பங்குகளை விற்பதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. முதலீடு செய்வதில் மிகுந்த எச்சரி்க்கையுடன் உள்ளனர்.

படுவீழ்ச்சி

இதன் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பை சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிப்டியில் 325 புள்ளிகளும் சரிந்தன. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1129 புள்ளிகள் சரிந்து, 57,209 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 299புள்ளிகள் சரிந்து, 17,176 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது. காலை வர்த்தகத்தில் 950 பங்குகள் முன்னோக்கி நகர்ந்து வருகின்றன, 1611 பங்குகள் சரிவில் உள்ளன, 142 பங்குகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளன.

சரிவு

நிப்டியில் இன்போசிஸ், டெக்மகிந்திரா, ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், என்டிபிசி, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் லாபத்தில் செல்கின்றன

30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில், டாடா ஸ்டீல், என்டிபிசி, பவர்கிரிட், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன. மற்ற நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன.