Share market today: வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகத்தை சரிவுடன் முடித்தன
வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கி சரிவுடன் முடிந்தது
தொடர் சுணக்கம்
பங்குச்சந்தையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பங்குகளை வாங்கியும், கைமாற்றவும் செய்தனர். ஆனால், திடீரென ஏற்பட்ட சுணக்கம், பங்குச்சந்தையை சரிவுக்கு கொண்டு சென்றது. அதன்பின் மாலை வர்த்தகம் முடியும்வரை பங்குச்சந்தையில் சரிவு தொடர்ந்தது.

தீவிரமடையும் போர்
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வருவதால், ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் சரிவில் முடிந்தது, முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பிய யூனியன் கூட்டம் இன்றுடன் முடிகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் ரஷ்யா மீது கூடுதலான பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படுமா என்பதையும் முதலீட்டாளர்கள் கவனித்தனர்
உக்ரைன் மக்கள் மீது ரசாயனவெடிகுண்டுகள், உயிரிவெடிகுண்டுகளை ரஷ்யா பயன்படுத்தினால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று அதிபர் ஜோ பிடன் எச்சரித்திருப்பதையும் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

விலை உயர்வு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதிலும், உள்நாட்டில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 80 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால்வரும் நாட்களில் பணவீக்கம் உயரும் சூழல் இருக்கிறது. இந்த காரணங்கள் அனைத்தையும் முதலீட்டாளர்கள் கவனித்து முதலீடு செய்வதில் தயக்கம் காட்டினர்.
சர்வதேச சந்தையில் அமெரிக்க பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் முடிந்தது, ஆசியப் பங்குச்சந்தையில் ஏற்றமும், இறக்கமும் கலந்திருப்பது, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

சரிவில் முடிந்த வர்த்தகம்
மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 233 புள்ளிகள் சரிந்து, 57,362 புள்ளிகளில் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 43 புள்ளிகள் வீழ்ந்து 17,179 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தகத்தை முடித்தன.
லாபம், நஷ்டம்
மும்பைப் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடக் வங்கி, எஸ்பிஐ வங்கி, டாக்டர்ரெட்டீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பார்திஏர்டெல், இன்டஸ்இன்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன.
டைட்டன் நிறுவனப் பங்கு 3 சதவீதம் சரிந்தது. டெக் மகிந்திரா, மாருதி, நெஸ்ட்லே, விப்ரோ, பவர்கிரிட், லார்சன் அன்ட் டூப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிவில் முடிந்தன.
நிப்டியில் நுகர்வோர் துரை, தகவல்தொழில்நுட்பம், எப்எம்சிஜிஆகிய துறை பங்குகள் சரிவில்முடிந்தன. ரியல்எஸ்டேட், தொலைத்தொடர்பு பங்குகள் லாபத்தில் முடிந்தன
