இந்திய பங்குச் சந்தை இன்று காலை முதல் நல்ல வர்த்தகத்தை துவக்கி ஏறுமுகமாக இருந்து வருகிறது.
இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று நண்பகல் 1000 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. அதேசமயம், நிப்டி 23,600 புள்ளிகளில் வர்த்தகம் செய்து வந்தது. இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ மிட்கேப் மற்றும் பிஎஸ்இ ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏறுமுகமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் பிஎஸ்இ மிட்கேப் மற்றும் பிஎஸ்இ ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சுமார் ஒரு சதவீதம் அதிகரித்து காணப்பட்டது.
நேற்று சென்செக்ஸ் 77,186.74 புள்ளிகளில் முடிவடைந்து இருந்தது. இன்று சென்செக்ஸ் 77,687.60 புள்ளிகளில் தொடங்கி 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 78,150 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி 50 பங்குகள் நேற்று 23,361.05 புள்ளிகளில் முடிந்து இருந்தது. இன்று 23,509.90 புள்ளிகளில் தொடங்கி 1.24 சதவீதம் உயர்ந்து 23,650 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் பிற்பகல் 1:15 மணியளவில் 955 புள்ளிகள் அல்லது 1.24 சதவீதம் உயர்ந்து 78,141.72 புள்ளிகளாகவும், நிஃப்டி 50 279 புள்ளிகள் அல்லது 1.19 சதவீதம் உயர்ந்து 23,640 புள்ளிகளாகவும் இருந்தது. அந்த நேரத்தில் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.90 சதவீதம் உயர்ந்து, பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 0.70 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.
இந்தியாவின் விலையுயர்ந்த பங்குகள்: எது முதலிடம்? வாங்குனா லட்சாதிபதி தான்
பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் (எம்-கேப்) நேற்றைய முடிவான ரூ. 419.5 லட்சம் கோடியிலிருந்து கிட்டத்தட்ட ரூ. 424 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் சுமார் ரூ. 4.5 லட்சம் கோடி அளவுக்கு லாபம் பார்த்தனர்.
இந்திய பங்குச் சந்தையின் உயர்வுக்கு காரணம் என்ன?
அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் இது ஆசிய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. ஆசியாவில் ஜப்பான், ஹாங்காங், கொரியா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தை இன்று ஒரு சதவீதம் வரை ஏற்றம் கண்டுள்ளது.
கனடா, மெக்சிகோ மீது டிரம்ப் வரி:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கைகள் சமீப காலமாக உலக பங்குச் சந்தையில் எதிரொலித்து வருகிறது. கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறந்குமதியாகும் பொருட்களின் மீது டிரம்ப் அதிரடியாக 25 சதவீத வரியை விதித்து இருந்தார். இதனால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து இந்த வரி உயர்வை உடனடியாக டிரம்ப் நிறுத்தி வைத்தார். இது சந்தைக்கு சாதகமாக அமைந்து இன்று ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி வட்டி குறைக்குமா?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதி கொள்கைக் குழு (MPC) கூட்டம் பிப்ரவரி 5-7 தேதிகளில் நடைபெற உள்ளது. வட்டி விகிதக் குறைப்பு 25 அடிப்படைப் புள்ளிகளாக இருக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது. இதுவும் பங்குச் சந்தையில் பாசிடிவ் ஆக பார்க்கப்படுகிறது.
இந்திய தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சி:
கடந்த ஆறு மாதங்களில் இந்திய தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூலும் கடந்த ஜனவரி மாதம் 1.92 லட்சம் கோடி அளவிற்கு வசூலாகி இருந்தது. இதுவும் பங்குச் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
Share Market Today: குறுகிய மற்றும் நீண்ட கால முதலீட்டிற்கு என்ன பங்குகளை வாங்கலாம்?
