சென்செக்ஸ் 690 புள்ளிகள் உயர்வு! 2 நாள் வீழ்ச்சிக்குப் பின் நிம்மதி அடைந்த முதலீட்டாளர்கள்!
சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகள் உலகளாவிய உலோக விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய பங்குகள் இரண்டு நாள் பின்னடைவுக்குப் பின் புதன்கிழமையன்று உயர்வுடன் முடிந்துள்ளன. என்எஸ்இ நிஃப்டி 1.01 சதவீதம் உயர்ந்து 21,453.95 புள்ளிகளிலும், பிஎஸ்இ சென்செக்ஸ் 0.98 சதவீதம் உயர்ந்து 71,060.31 புள்ளிகளிலும் முடிவடைந்தன.
தொடர்ந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம் முதலீட்டாளர்களிடம் கவலைகளை ஏற்படுத்தி பங்குகளின் மதிப்பில் ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுத்தது என வர்த்தக வல்லுநர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
நிஃப்டி சந்தையில் புதன்கிழமை அலுமினிய உற்பத்தியாளர் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்தது. ரஷ்யாவின் விநியோக பற்றாக்குறை மற்றும் சீனாவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆகியவை இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகள் உலகளாவிய உலோக விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பல துறைகளுக்கு அலுமினிய பாகங்களை வழங்கும் ஹிண்டால்கோ நிறுவனம் இதுவரை இந்த ஆண்டின் சிறப்பான வர்த்தக தினத்தைப் பதிவு செய்துள்ளது. மின்சார வாகனங்கள், நுகர்வோர் சாதனங்கள், தொழில்துறை உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் இந்நிறுனவத்தின் தேவை அதிகமாகக் காணப்படுகிறது.
நிஃப்டியில் டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் போன்ற மற்ற உலோகப் பங்குகள் முறையே 3.9 மற்றும் 2.8 சதவீதம் உயர்ந்துள்ளன. உலோகத் துறையில் 13 முக்கிய பங்குகளில் 12 பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. இந்தியன் ஆயில் நிறுவனம் கணிப்புகளை முறியடித்து மூன்றாவது காலாண்டில் லாபத்தை பதிவு செய்ததை அடுத்து 3.2 சதவீதம் உயர்வு பெற்றுள்ளது.