உக்ரைன்-ரஷ்யா இடையிலான பதற்றம், சர்வதேச காரணிகள் காரணமாக மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் இன்றும் சென்செக்ஸ் புள்ளிகள் ஊசலாட்டம் இருந்தது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான பதற்றம், சர்வதேச காரணிகள் காரணமாக மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் இன்றும் சென்செக்ஸ் புள்ளிகள் ஊசலாட்டம் இருந்தது.

உக்ரைன் நேட்டோ படையில் சேரக்கூடாது என்று ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. ஆனால், உக்ரைன் சேர்வதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்த நிலையில் உக்ரைன் எல்லையில் கடந்த 2 வாரங்களாக லட்சக்கணக்கான வீரர்களை ரஷ்யா குவித்து, போர் ஒத்திகை நடத்தியது. இதனால் உலக நாடுகளிடையே ஒருவிதமான பதற்றமான சூழல் ஏழுந்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் அச்சம் நிலவியது.

அதனால், சர்வதேசந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவுக்குப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தால் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று தங்கம், வெள்ளி மீது முதலீட்டை செலுத்தினர்.

இந்நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்து ரஷியா படைக் குவிப்பை திரும்பப்பெற்று வருவதாகத் தகவல் எழுந்தநிலையிலும் பங்குச்சந்தையில் இன்றும் ஊசலாட்டம் குறையவில்லை. 

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகத்தின்போது 789 புள்ளிகள்வரை குறைந்து, வர்த்தகம் முடிவில் 145 புள்ளிகள் சரிந்து, 57,997 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசியப்பங்குச்சந்தையான நிப்டியில் வர்த்தகத்தின் இடையே 233 புள்ளிகள் சரிந்தாலும், இறுதியில் 30 புள்ளிகள் குறைந்து 17,322 புள்ளிகளில் நிலைபெற்றது.

மும்பைப் பங்குச்சந்தையில் பார்தி ஏர்டெல், மகிந்திர அன்ட்மகிந்திரா, கோடக் வங்கி, நெஸ்டில் இந்தியா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகிய பங்குகள் லாபமீட்டின. நிப்டியில் டேவிஸ் லேப்ஸ், ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎப்சி லைப், ஐஓசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்தன. அதேநேரம் ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, என்டிபிசி, அல்ட்ராடெக் சிமென்ட், டாடா ஸ்டீல், யுபிஎல், டாடா மோட்டார்ஸ், பஜாஜா பைனான்ஸ், சன் ஃபார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.