சாம் சங் நிறுவனம் இந்தியாவில் அதிநவீன வகை பிரீமியம் ரேஞ்ச் எல்.இ.டி. டிவி ஹோம் தியேட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. விலை அதிகமெல்லாம் இல்லை 1 கோடி ரூபாயில் இருந்துதான் தொடங்குகிறது. 

இல்லத்துக்குள் இனிமை கூட்ட நவீனத்துடன் கைகோர்த்திருக்கும் சாம்சங் நிறுவனம் பொழுதுபோக்கு அம்சங்களின் எல்லையை விரிவடையச் செய்துள்ளது. செவ்வாய் கிழமை சாம்சங் நிறுவனம் வீடுகளுக்கான நவீன வகை டிவி ஹோம் தியேட்டர்களை அறிமுகம் செய்தது. 110 அங்குலம், 130 அங்குலம், 220 அங்குலம் மற்றும் 260 அங்குலம் என4 அளவுகளில் ஹோம் தியேட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

உயர் காட்சித் தொழில் நுட்பத்துடன் கூடிய அதிநவீன எல்.இ.டி. திரை கண்முன் நடப்பதைப் போன்ற தத்ரூபமான காட்சி அனுபவத்தையும் கண்ணுக்கு இதமான ஒளியமைப்பையும் கொடுக்கிறது. குறைந்த பட்ச பராமரிப்பில் நீண்ட நெடுங்காலம் உழைக்கும் திறன் - 1 லட்சம் மணி நேரம் சிறப்பாக செயல்படும் திறனுக்கு உறுதியளிக்கின்றனர் தயாரிப்பாளர்கள். எந்த வகை வீடுகளின் அமைப்புக்கும் பொருந்தி செயல்படும் திறன் இதன் மற்றொரு சிறப்பம்சமாம் இதன் திரையமைப்பு மற்றும் அளவை அவரவர் வசதிக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியும். 

தங்கள் நுகர்வோரின் தேவைகளை அறிந்துகொண்டு சிரத்தையுடன் உழைத்து வெற்றியடைந்திருப்பதாக சாம்சங் துணைத் தலைவர் புனித் சேத்தி தெரிவித்திருக்கிறார். எல்லாம் சரிதான் விலைதான் கொஞ்சம் உதைக்கிறது. விலை ஆரம்பமே ஒரு கோடி ரூபாயில் இருந்து தொடக்கம். அதிகபட்சமாக 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை. பின் என்ன சாதாரண சாமானியர்களுக்காகவா உருவாக்கப்பட்டுள்ளன இந்த ஹோம் தியேட்டர்கள்? அதிக வருமானமுள்ள தனியார்களுக்கும், பிரம்மாண்ட திரை அனுபவங்களை விரும்பும் கோடீஸ்வர ரசிகர்களுக்கும், தொழில் முறை கலைஞர்களுக்கும் உருவாக்கப்பட்டுள்ளன.