2024-25 நிதியாண்டிற்கான Form 16, ஜூன் 15, 2025க்குள் ஊழியர்களுக்கு வழங்கப்படும். மேம்படுத்தப்பட்ட தகவல்கள், தெளிவான வருமான விவரங்கள் மற்றும் புதிய வரிச் சட்டங்கள் உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் உள்ளன.
நிதியாண்டு 2024–25-ற்கான Form 16 ஆவணம், ஊதியத் தொழிலாளர்களுக்கு வரும் 2025 ஜூன் 15-க்குள் வழங்கப்படவுள்ளது. வருமான வரி அறிக்கையை (ITR) சரியாகவும் முழுமையாகவும் தாக்கல் செய்ய இந்த ஆவணம் மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டின் Form 16, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட தகவல்கள், தெளிவான வருமான விவரங்கள், மற்றும் புதிய வரி சட்டச் சேர்க்கைகள் ஆகியவற்றுடன் வருகிறது. எனவே மிகுந்த கவனத்துடன் நிரப்ப வேண்டும் என பொருளாதார ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சுயமாக நிரப்புவர்கள் ஒருமுறைக்கு பலமுறை சோதனை செய்து சமர்பிக்குமாறும் பொருளாதார நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Form 16-இல் இடம்பெற்றுள்ள முக்கியமான மாற்றங்கள்
1. ஊதியத்தின் முழுமையான உட்பகுதிகள்
ஊதியம் தொடர்பாக எல்லா வகையான தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அடிப்படை உதியம், சேமிப்பு தொகை, பிடித்தம், வரிவிலக்கு, சலுகைகள், பிஎஃப் பிடித்தம் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இது ஊதியதாரருக்கு தங்களது வருமானத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவுவதுடன், வரி கணக்கீட்டில் குழப்பங்களை தவிர்க்க உதவும்.
2. மற்ற வருமானங்களும் TCS விவரங்களும்
பணியாளர் Form 12BBA மூலம் வைப்புத் தொகை வட்டி, வீட்டு வாடகை வருமானம், வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட பிற வருமானங்களை நிறுவனத்திடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தால், அதற்கான TDS (Source-இல் வரி கழிவு) மற்றும் TCS (Source-இல் வரி வசூல்) விவரங்களும் Form 16-இல் இடம்பெறும். இது வருமான வரி தாக்கலில் ஒருங்கிணைந்தத் தரவுகளை வழங்குவதற்கும் தவறுகளைக் குறைப்பதற்கும் உதவும்.
3. மேம்படுத்தப்பட்ட நிலையான கழிவு (Standard Deduction)
புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் ஊதியதாரர்களுக்கு ₹75,000 வரை நிலையான கழிவாக (standard deduction) கோரலாம். இது கடந்த ஆண்டுகளின் ₹50,000-ஐ விட அதிகமாகும், மேலும் நடுத்தர வருமானத்தைப் பெறுவோருக்கு நல்ல நிவாரணமாக அமையும்.
4. தேசிய ஓய்வூதியத் திட்ட (NPS) பங்களிப்புகளில் அதிகரிக்கப்பட்ட கழிவுகள்
நிதியாண்டு 2024–25 முதல், Section 80CCD(2) படி, நிறுவனத்தால் ஊதியதாரரின் NPS கணக்கில் செலுத்தப்படும் அடிப்படை ஊதியத்தின் 14% வரை புதிய வரி முறையில் கழிவாகக் கோரலாம். பழைய வரி முறையில் இது 10% வரையிலேயே அனுமதிக்கப்படுகிறது. இது ஊதியதாரர்களை ஓய்வூதிய நிதிகளில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
5. வேலை மாற்றியவர்கள் கவனம்
நீங்கள் ஒரு நிதியாண்டுக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றியிருந்தால், ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் தனித்தனியாக Form 16 பெற்றுக் கொள்ள வேண்டும்.அனைத்து வருமானங்களும் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்துதல், வரி சரிக்கட்டுதல் மற்றும் வரி திரும்பப்பெறுதல் ஆகியவற்றில் முக்கியமானது.
Form 16 பதிவிறக்கம் செய்வது எப்படி?
TRACES இணையதளம்-இல் PAN எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து, பகுதி A (TDS விவரங்கள்) மற்றும் பகுதி B (ஊதிய விவரங்கள்) ஆகிய இரண்டும் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம். இது மின்னணு முறைமையாக்கத்தின் ஒரு பகுதியாகும். இது ஆவணங்களை எளிதாகப் பெற்றுப் பயன்பாட்டில் வசதியளிக்கிறது.
இந்த மாற்றங்கள் வரி முறையை மேலும் தெளிவானதாக்கவும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், மற்றும் புதிய வரி முறையை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஊதியதாரர்கள் தங்களது Form 16 ஆவணத்தை சுருக்கமாகவும் முழுமையாகவும் ஆராய்ந்து, தங்களுக்கேற்ற வரி திட்டத்தைத் தேர்ந்தெடுத்து திட்டமிட்டு செயல்பட வேண்டும்.