இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய் போன்ற இறக்குமதிப் பொருட்களின் விலை உயர்கிறது. இந்த விலை உயர்வு, போக்குவரத்து,உரச் செலவுகளை அதிகரித்து, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலையையும் கடுமையாக உயர்த்துகிறது.
இந்திய பொருளாதாரத்தில் சரிவு ஏன்?
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதை யாராலும் தடுக்க முடுக்கவில்லை. டிசம்பர் 2025-இல் ஒரு அமெரிக்க டாலர் 85.50 ரூபாயைக் கடந்துவிட்டது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூபாய் 6-7% மதிப்பிழந்திருக்கிறது. இதன் தாக்கம் பெட்ரோல்-டீசல் விலையில் மட்டும் நிற்கப்போவதில்லை; அன்றாட காய்கறி முதல் பருப்பு வரை அனைத்தும் விலை உயரப்போகிறது.
சமையல் எண்ணெய் விலை
ரூபாய் மதிப்பிழப்பின் முதல் வெட்டு இறக்குமதிப் பொருட்களின் மீது விழுகிறது. இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85%க்கும் மேல் வெளிநாடுகளைச் சார்ந்திருக்கிறது. டாலருக்கு எதிராக ரூபாய் பலவீனமாகும்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு அதிக ரூபாய் செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5-8 ரூபாய் வரை உயர வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது தொடக்கம் மட்டுமே. அடுத்த அடி உணவுப் பொருட்களுக்கு. இந்தியா உணவு எண்ணெயில் 60%, பருப்பு வகைகளில் 25-30%, உரங்களில் 90% இறக்குமதி செய்கிறது. பாமாயில், சன் ஃப்ளவர் ஆயில், கடுகு எண்ணெய் எல்லாம் இந்தோனேசியா, மலேசியா, உக்ரைன், கனடாவிலிருந்து வருகிறது. டாலர் வலுவாக இருக்கும்போது இவற்றின் விலை ரூபாயில் அதிகரிக்கிறது.
காய்கறி விலை என்னவாகும்
உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் உற்பத்திச் செலவை காய்கறி விலையில் ஏற்றுகிறார்கள். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவை ஏற்கனவே 80-120 ரூபாய் கிலோவைக் கடந்திருக்கின்றன. இனிவரும் மாதங்களில் இது இயல்பாகவே 150-200 ரூபாயைத் தொடும். போக்குவரத்துச் செலவும் உயர்கிறது. காய்கறிகள் கேரளா, கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை டீசல் லாரிகளில் வருகின்றன. டீசல் விலை உயர்ந்தால் போக்குவரத்துக் கட்டணம் உயரும். இறுதியில் நுகர்வோருக்கே அது பளுவாகும். ரிசர்வ் வங்கி ரூபாயைத் தாங்கிப்பிடிக்க டாலர் விற்று வருகிறது. ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையிலிருந்து பணத்தை வெளியேற்றுவதால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இது இந்தியாவுக்கு சாதகமில்லை
உலகளவில் டாலர் வலுவடைந்து வருவதும் இந்தியாவுக்கு சாதகமில்லை. முடிவாக, ரூபாய் மதிப்பிழப்பு என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. அது ஒவ்வொரு இந்திய வீட்டின் சமையலறை வரை வந்து நிற்கப்போகும் பெரும் நெருக்கடி. பெட்ரோல் மட்டுமல்ல, காய்கறி கூட இனி “லக்ஸரி” ஆகப்போகிறது. நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட் தலைகீழாக மாறப்போகிறது. இதைத் தடுக்க வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி உயர்வு, உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு மட்டுமே வழி. அதுவரை நாம் அனைவரும் அதிக விலை கொடுத்து வாழப்பழக வேண்டியிருக்கும்.


