சரக்கு ஏற்றுமதி சர்வதேச சவால்களால் மந்தமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் சேவைத் துறை வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த சேவை ஏற்றுமதி மற்றும் பணப் பரிமாற்றங்கள், ரூபாய் மதிப்பை பாதுகாக்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

இந்தியா அண்மையில் வெளிநாட்டு வர்த்தகத்தில் கலவையான நிலையை சந்தித்தாலும், ரூபாய் மதிப்பை தாங்கி நிற்கும் மிகப்பெரிய சக்தியாக சேவைத் துறை உருவெடுத்துள்ளது. சரக்கு ஏற்றுமதி கட்டண இடையூறுகள் மற்றும் சர்வதேச வரி சவால்களால் மந்தமடைந்த நிலையில், சேவை ஏற்றுமதி மற்றும் பணப் பரிமாற்றங்கள் நாட்டின் நடப்புக் கணக்கு நிலைக்கு முக்கிய ஆதரவை அளித்து வருகின்றன என்று கேர்எட்ஜ் அறிக்கை வலியுறுத்துகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களில் பல்வேறு காரணங்களால் அழுத்தம் எதிர்கொண்டது. உலக பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலர் வலிமை, மற்றும் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு சற்று மந்தமானது ஆகியவை ரூபாய் மதிப்பை கீழே தள்ளின. ஆனால் இப்போது ரூபாய் மீண்டும் மேல் நோக்கி பாயத் தொடங்கியுள்ளது. அதற்கு பின்னால் இந்தியாவின் சேவைத்துறை மிகப்பெரிய காரணமாக திகழ்கிறது.

இந்தியாவின் ஐ.டி., பி.பி.ஓ., நிதி சேவைகள், மருத்துவ சுற்றுலா, கல்வி, மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, நாட்டிற்கு பெருமளவு வெளிநாட்டு நாணயத்தை ஈர்க்கிறது. சேவைத்துறையின் ஏற்றுமதி வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருவது ரூபாய் மதிப்பை உறுதியாக தாங்கும் தூணாக உள்ளது. குறிப்பாக, இந்திய மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில் மீண்டும் அதிகளவு ஒப்பந்தங்களைப் பெறத் தொடங்கியிருப்பது வெளிநாட்டு நாணய வருகையை அதிகரித்துள்ளது.

சரக்கு ஏற்றுமதியில் சவால்கள் அதிகரிப்பு

நிதியாண்டு 25-26-ன் ஆரம்பகாலத்தில் நல்ல வேகத்தில் இருந்த சரக்கு ஏற்றுமதி, செப்டம்பர் முதல் மெலிதாகத் தொடங்கியது. ஏப்ரல்–ஆகஸ்ட் காலத்தில் 7.3% வளர்ச்சி இருந்தபோதிலும், செப்டம்பர்–அக்டோபர் 2025-ல் பெட்ரோலியம் அல்லாத ஏற்றுமதி 3.9% குறைந்தது. அமெரிக்கா விதித்த 50% பரஸ்பர வரிகள் ரத்தினம், ஆபரணம், ஜவுளி, ஆயத்த ஆடைகள் போன்ற தொழிலாளர் அதிகம் உள்ள துறைகளை கடுமையாகப் பாதித்தன. ரத்தினம்–நகை ஏற்றுமதி 15.6% வீழ்ச்சி கண்டது; ஜவுளி 9.5% குறைந்தது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதி சரிந்தபோதும், UAE, ஹாங்காங், சீனா போன்ற நாடுகள் ஓரளவு சமநிலையை ஏற்படுத்தின. ஆனால் இது நீடிக்கும் ஒரு அமைப்பு மாற்றமா என்பது இன்னும் தெரியாத நிலை.

இறக்குமதி அதிகரிப்பு – வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைப்பு

உள்நாட்டு தேவையின் வலிமை இறக்குமதியை 6.8% உயர்த்தியது. தங்கம்–வெள்ளி இறக்குமதி 30.5% உயர்ந்து வரலாற்று உச்சத்தை எட்டியது. இதன் விளைவாக சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை 199 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

சேவைத்துறை – இந்தியாவின் பாதுகாப்பு அரண்

இந்த அழுத்தங்களின் நடுவிலும், சேவைத்துறை இந்திய வெளிநாட்டு வர்த்தகத்தில் தலை நிமிர வைக்கும் முக்கிய பங்காற்றுகிறது. FY26-ன் முதல் 7 மாதங்களில் சேவை ஏற்றுமதி 8.2% வளர்ந்துள்ளது. மென்பொருள் சேவைகள் (12.5%), வணிகச் சேவைகள் (22.4%) ஆகியவை முக்கிய பங்காற்றின. சரக்கு ஏற்றுமதி சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், சேவை வர்த்தக உபரி மற்றும் பணப் பரிமாற்றங்கள் இனியும் இந்திய ரூபாயை தாங்கும் சக்தியாக இருக்கும். கச்சா எண்ணெய் விலைகள் நிலையாக இருந்தால், FY26-ல் நடப்புக் கணக்கு பற்றாக்குறை GDP-யில் சுமார் 1% என நிர்வகிக்கப்படும் என கேர்எட்ஜ் கணிக்கிறது.

எதிர்கால அபாயங்கள்

H-1B விசா கட்டண உயர்வு மற்றும் அமெரிக்க HIRE சட்டம் இந்தியாவின் IT/சேவை ஏற்றுமதிக்கு எதிர்காலத்தில் சவாலாக இருக்கக்கூடும் என அறிக்கை எச்சரிக்கிறது. சரக்கு ஏற்றுமதி குறைந்தாலும், சேவைத் துறையின் வலிமை தான் ரூபாய் மதிப்பை மீண்டும் மேல் நோக்கி தூக்கிச் செல்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் திறன், உலகளாவிய சேவைத் தேவை, மற்றும் நிபுணத்துவம் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் வலுவான தூண்களாக தொடரும்.