ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாறும் திட்டத்தை தீட்டி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. ஸ்பெக்டர் கூப் எனும் பெயரில் உருவாகி வரும் முதல் எலெக்ட்ரிக் கார் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ரைத் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

ஸ்பெக்டர் மாடலை தொடர்ந்து கலினன் எஸ்.யு.வி., கோஸ்ட் சலூன் மற்றும் ஃபேண்டம் லிமோசின் போன்ற மாடல்கள் முழுமையான எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் வகையில் மாற்றப்பட இருக்கிறது. மேலும் இது 2030-க்குள் செய்து முடிக்க ரோல்ஸ் ராய்ஸ் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

"117 ஆண்டுகள் ரோல்ஸ் ராய்ஸ் வரலாற்றில் முதல் முறையாக 2021 ஆண்டு தான் அதிக கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2030-க்குள் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் என்ற இலக்கை அடைய ஒவ்வொரு மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்டை உருவாக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்தது." 

"பிரிட்டனில் 2030 முதல் புதிய பெட்ரோல், டீசல் கார் விற்பனைக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அரசு திட்டம் காரணமாக மட்டும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிடவில்லை. உலகம் முழுக்க எங்களின் இளம் வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் திறன் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களை அதிகம் கேட்க துவங்கி இருக்கின்றனர்," என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி முல்லர் அட்வோஸ் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் எலெக்ட்ரிக் ஃபேண்டம் மாடல் தற்போது விற்பனையாகி வரும் வி12 பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலை விட விலை குறைவாகவே இருக்கும். ஃபேண்டம் இ.வி. மாடலின் செயல்திறனில் எந்த சமரசமும் இருக்காது என முல்லர் தெரிவித்து இருக்கிறார். 

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் தனது ஐந்து மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது. விரைவில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பிளாக் பேட்ஜ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.