ஓய்வுபெற்ற வன அதிகாரி ஒருவர் போலி பங்கு வர்த்தக செயலி மூலம் ₹6.8 கோடி இழந்துள்ளார். வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்ட போலி செயலிகள் மூலம் பணத்தை இழந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சைபர் கிரைம்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓய்வு பெற்ற வன ஊழியர் ஒருவர் தான் வாழ்நாள் முழுதும் சேமித்த பணத்தை ஒரே நாளில் இழந்துள்ளார். சந்தேக்கும்படியான போலி வர்த்தக செயலியை பதிவிறக்கம் செய்த அவர் கோடிக்கணக்கான நொடிப்பொழுதில் ரூபாயை இழந்தார்.

தமிழ்நாட்டில் ஓய்வுபெற்ற ஒரு மூத்த வன அலுவலர் மோசடியில் சிக்கி ₹6.8 கோடி கோடி ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வன சேவையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கிருஷ்ணன் குமார் கவுஷல் என்பவர், உயர் வருமானம் தரும் என கூறிய போலி பங்கு வர்த்தக செயலிகளின் மாயைச் சீற்றத்தில் சிக்கியுள்ளார்.

மோசடி எப்படி நடைபெற்றது?

2024 டிசம்பரில், வாட்ஸ்அப்பில் வந்த ஒரு மெசேஜ் மூலம் "SMC Apex" மற்றும் "Shanda Capital" என்ற போலி பங்கு வர்த்தக செயலிகளை பதிவிறக்கிய அவர், அவற்றின் வழியாக பங்குகளில் முதலீடு செய்வதற்காக ₹6.58 கோடி வரை செலுத்தினார். இந்தத் தொகை, அவரது ஓய்வூதியம், சேமிப்புகள் மற்றும் வீட்டை விற்று கிடைத்த பணமாகும். செயலியில் காண்பித்த பங்கு விலை விவரங்கள் உண்மையான பங்குசந்தை நிலவரத்துடன் பொருந்தவில்லை என்பதை கவனித்ததும் அவர் சந்தேகமடைந்து, 1930 சைபர் குற்றவியல் ஹெல்ப்லைனில் புகார் செய்தார். இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் கேரளாவை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் மூவர் கைது

குற்றவாளிகள் கேரளமாநிலம் எர்ணாகுளம் பகுதியில் இருப்பதாக தகவல் வந்த நிலையில், அங்கு சென்ற சைபர் கிரைம் போலீசார் ஸ்ரீஜித் ஆர் நாயர் , அப்துல் சலூ, முகமது பார்வாஇஸ் ஆகியோரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்கள் நடத்தி வரும் போலி பங்கு வர்த்தக செயலியில் எத்தனை பேர் சிக்கி எவ்வளவு ரூபாய் பணத்தை இழந்துள்ளனர் என கூடிய விரைவில் தெரிய வரும். சைபர் மோசடிகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிக ஆசைப்பட்டு முதலீடு செய்ய வேண்டாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பங்குச்சந்தையில் முதலீடு செய்து குறைந்த காலத்தில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என நினைப்போரை சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் குறிவைத்து தூக்குவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்கள், பங்கு வர்த்தகத்திற்கு பயன்படும் செயலிகளை பதிவிறக்கும் முன் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் சந்தேகத்திற்கிடம் இருந்தால், உடனடியாக சைபர் குற்றப்பிரிவிடம் (1930) புகார் செய்ய வேண்டியது அவசியம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.