கடந்த செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3.99 சதவீதமாக உயர்ந்துள்ளது இருப்பினும் அது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு இலக்குக்குள் இருப்பதால் அடுத்த நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் முக்கிய கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டியை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டி நிர்ணயம் செய்யப்படும். சில்லரை பணவீக்கத்தை கணக்கில் கொண்டே கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். சில்லரை விலை பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதத்தை தாண்டில் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைப்பது கடினம். 

அதேசமயம் சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதத்தை காட்டிலும் குறைவாக இருந்தால் வட்டியை குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.99 சதவீதமாக உயர்ந்தது. 2018 செப்டம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 3.7 சதவீதமாக உயர்ந்தது. காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். 

கடந்த செப்டம்பரில் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்தாலும் அது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு இலக்குக்குள்தான் உள்ளது.  மேலும், நம் நாட்டின் பொருளாதார நிலவரமும் சற்று கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளது. ஆகையால் பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு தனது அடுத்த நிதிக்கொள்கை ஆய்வறிக்கையில் முக்கிய கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த 5 நிதிக்கொள்கை கூட்டங்களிலும் கடனுக்கான வட்டியை குறைத்தது குறிப்பிடத்தக்கது.