rbi monetary policy: 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாகக் குறைத்து ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கைக் கூட்டத்தில் இன்று அறிவித்துள்ளது

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாகக் குறைத்து ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கைக் கூட்டத்தில் இன்று அறிவித்துள்ளது. 

நிதிக்கொள்கைக் கூட்டம்

2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றையடுத்து, கொண்டுவரப்பட்ட லாக்டவுனில், அதாவது, 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. 

இன்று 10-வது நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் நடந்துள்ளது. இதுவரை வட்டி வீதம் மாற்றப்படவில்லை. தற்போது குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 % என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.5% என்றும் நீட்டித்துள்ளது.

வரும் ஜூன் மாதம் அடுத்து நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வேண்டுமானால் வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி மாற்ற வாய்ப்புள்ளது. 
நிதிக்கொள்கைக் கூட்டம் முடிந்ததும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஜிடிபி குறைப்பு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று கடந்த நிதிக்கொள்கையில் தெரிவித்திருந்தோம். ஆனால், சர்வதேச காரணிகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகத்தான் இருக்கும்.கச்சா எண்ணெய் விலையை பேரல் 100 டாலர் என்ற அடிப்படையில் வைத்துதான் பொருளாதார வளர்ச்சி குறித்த கணக்கீட்டை வகுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டில் பணவீக்கமும் சராசரியாக 5.7 சதவீதமாகத்தான் இருக்கும்” 
இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்

ஆனால், நாட்டில் சில்லரை பணவீக்கம் கடந்த 2 மாதங்களாக 6 சதவீதமாக இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தையும் தாண்டிவிட்டது. இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வட்டி வீதம் உயர்த்தப்படவில்லை. 

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையிலோ நடப்பு நிதியாண்டின் சராசரி பணவீக்கம் 5.7 சதவீதமாகத்தான் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பணவீக்கத்தை மேலும் உயர்த்தும் எனும்போது, பணவீக்கத்தை எவ்வாறு ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது என்பது கேள்வியாக இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிடவும் ஊக்கப்படுத்தவும் வட்டிவீதம் உயர்த்தப்படவி்ல்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நிதிகொள்கை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, பணவீக்கம் சராசரி 5.7% இருக்கும் என்று கூறுவதை பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

பணவீக்கம் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் மத்திய வங்கிகள் வட்டிவீதத்தை உயர்த்திவரும் நிலையில் இந்தியாவில் மட்டும் உயர்த்தாமல் இருப்து இன்னும் பணவீக்கத்தை உயர்வாகக் கொண்டு செல்லவே வழிவகுக்கும்