டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பிரத்யேகமாக மாடிஃபை செய்யப்பட்ட நானோ எலெக்ட்ரிக் காருடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடா பிரத்யேகமாக மாடிஃபை செய்யப்பட்ட நானோ எலெக்ட்ரிக் கார் மாடலை பெற்று இருக்கிறார். ரத்தன் டாடா உருவாக்கி எலெக்ட்ரா EV நிறுவனம் நானோ எலெக்ட்ரிக் காருக்கான எலெக்ட்ரிக் பவர்டிரெயினை வினியோகம் செய்து இருக்கிறது. ரத்தன் டாடா நானோ எலெக்ட்ரிக் கார் அருகில் நிற்கும் புகைப்படத்தை எலெக்ட்ரா EV நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ லின்க்டுஇன் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
"72V நானோ EV மாடலில் ரத்தன் டாடா பயணம் செய்தது எலெக்ட்ரா EV குழுவிற்கு கனவு மெய்ப்பட்ட தருணம் ஆகும். டாடாவுக்கு நானோ EV மாடலை வினியோகம் செய்து அவரின் மதிப்புமிக்க கருத்துக்களை பெறுவதில் பெருமை கொள்கிறோம் ,"என எலெக்ட்ரா EV தனது பதிவில் தெரிவித்து இருக்கிறது.

நியோ EV எனும் பெயரில் மாடிஃபை செய்யப்பட்ட டாடா நானோ எலெக்ட்ரிக் வாகனங்களை எலெக்ட்ரா EV நிறுவனம் பெங்களூரை சேர்ந்த சைனிக்பாட் சிட் அண்ட் கோ எனும் நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தை நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்களால் இயக்கப்படும் மதர்பாட் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வகிக்கிறது.
2018 ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நானோ காம்பேக்ட் கார் மாடலின் உற்பத்தியை நிறுத்தியது. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV மற்றும் டிகோர் EV மாடல்களை இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 7500 கோடி முதலீடு செய்து இருக்கிறது. பத்து எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிகபட்சம் ஏழு மாடல்களை அடுத்த நான்கு ஆண்டுகளில் அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதுள்ள மாடல்கள் தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அலல்ட்ரோஸ் மற்றும் டியாகோ பிரபல ஹேட்ச்பேக் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு வருகிறது.
