பெங்களூரு, ஜன. 9-

நாடுமுழுவதும் பெட்ரோல் நிலையங்களில் நாளை முதல் டெபிட், கிரெடிட்கார்டுகளை கட்டணம் செலுத்த ஏற்கப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தும் போது கூடுதலாக ஒரு சதவீதம் பரிமாற்ற கட்டணம் வசூலிக்கும் வங்கிகளுக்கு எதிராக இந்த போராட்டத்தை பெட்ரோல் நிலைய  உரிமையாளர்கள் நடத்த உள்ளனர்.

வங்கிகள் நேரடியாக மக்களை குறிவைத்து கட்டணம் வசூலிக்காமல், கிரெடிட்,டெபிட் கார்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது மறைமுகமாக சுரண்டுகிறது என பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளை முதல் பணம் கொடுத்தால் பெட்ரோல், டீசல் போடுவோம், கார்டுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பெட்ரோல் நிலையங்கள் கூறும் பட்சத்தில் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

ஒரு புறம் பெட்ரோல், டீசல் போட்டுவிட்டு, டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தினால் 0.75 சதவீதம் தள்ளுபடி தரப்படும் என்று மத்தியஅரசு கூறுகிறது. ஆனால், மறுபுறம் வங்கிகள், ஒரு சதவீதம் பரிமாற்ற கட்டணமாக வசூலிக்கின்றன.

இது குறித்து அகில கர்நாடகா பெட்ரோலிய வர்த்தகர்கள் மற்றும் பெங்களூரு பெட்ரோல் டீலர்கள் அமைப்பின் தலைவர் பி.ஆர். ரவிந்திர நாத் கூறுகையில், “ வங்கிகள் முதலில் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.  அனைத்துபெட்ரோலிய டீலர்களின் லாபத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. ஏறக்குறை 0.3 முதல் 0.5 சதவீதம் வரை லாபம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வங்கிகள் கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும் போது, ஒரு சதவீதம் பரிமாற்ற கட்டணம் வசூலித்து வருகின்றன. இது தேவையில்லாத சிக்கல்களை எங்களுக்கு ஏற்படுத்துகிறது.

மக்கள் கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தும்போது, பரிமாற்றக்கட்டணம் வசூலிக்கும்போது, எங்களை எதிரிபோல் பார்ப்பார்கள். பணம் கொடுத்து டீசல், பெட்ரோல் போடுங்கள் என்று மக்களிடம் கூறினால் அவர்களுக்கு சவுகரியக்குறைவு ஏற்படும்.

ஆனால், உண்மையில் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே இதை செய்கிறோம். பெட்ரோல், டீசல் விலை முறைப் படுத்தப்பட்டுள்ளது. சரியான விலையில் விற்பனை ெசய்யப்பட்டு வருகிறது. அதில் வங்கிகள் பேச்சைக் கேட்டு, நாங்கள் கூடுதலாக ஒரு சதவீதம் கட்டணம் வசூலிப்பது சரியல்ல '' எனத் தெரிவித்தார்.

மக்களை தண்டிப்பது நியாயமா எனச் நிருபர்கள் கேட்டபோது , ரவிந்திரநாத்கூறுகையில், “ எங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்க வேண்டும் என்றும், பெட்ரோல் எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என்றும் நிர்ணயம் செய்வது நாங்கள் கிடையாது எண்ணெய் நிறுவனங்கள். அவர்களிடம் இந்த பிரச்சினை கொண்டு சென்றபோது, இது எங்களுக்கு தொடர்பு கிடையாது.

உங்களுக்கும், வங்கிகளுக்கும் இடையிலான பிரச்சினை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டனர். ஆதலால், நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் ஒன்று கூடி முடிவு எடுத்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து கிரெடிட், டெபிட் கார்டுகளை நாளை முதல் ஏற்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை பின்வாங்கப்போவதில்லை. பரிமாற்ற கட்டணத்தை வங்கிகள் திரும்பப் பெறும் வரை இந்த போராட்டம் தொடரும்'' எனத் தெரிவித்தார்.