உற்பத்திக் குறைவு, செமிகன்டக்டர் பற்றாக்குறை ஆகியவற்றால், 2022, ஜனவரி மாதத்தில் இந்தியாவில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 10 சதவீதம் குறைந்துவிட்டதாக, ஆட்டமொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பான எப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

உற்பத்திக் குறைவு, செமிகன்டக்டர் பற்றாக்குறை ஆகியவற்றால், 2022, ஜனவரி மாதத்தில் இந்தியாவில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 10 சதவீதம் குறைந்துவிட்டதாக, ஆட்டமொபைல் விற்பனையாளர்கள் கூட்டமைப்பான எப்ஏடிஏ தெரிவித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் 2லட்சத்து 87ஆயிரத்து 424 வாகனங்கள் விற்பனையான நிலையில் 2022, ஜனவரியில் 2 லட்சத்து 58ஆயிரத்து 329 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

எப்ஏடிஏ தலைவர் வின்கேஷ் குலாத்தி கூறுகையில் “ பயணிகள் வாகனங்களுக்கு நல்ல தேவை இருக்கிறது, விற்பனையும் சூடுபிடிக்கிறது, ஆனால், செமிகன்டக்டர் பற்றாக்குறையால் வாகனங்கள் உற்பத்தி இல்லை. கிராமப்புறங்களில் விலைவாசி உயர்வால் ஏற்பட்ட அழுத்தம், ஒமைக்ரான் வைரஸ் பரவல் ஆகியவற்றால், விற்பனை குறைந்தது.

பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதால், வர்த்தகரீதியான வாகனங்கள் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கனரக வாகனங்கள்பிரிவில் வளர்ச்சி நன்கு தெரிகிறது. மத்தியஅரசு கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாலும், மாநில அரசுகளின் திட்டங்களாலும், வர்த்தகரீதியான வாகனங்கள் விற்பனை அதிகரிக்கிறது.

ஒமைக்ரான் பரவல் குறைந்துவருவதால், சில்லரை விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. செமிகன்டக்டர் பற்றாக்குறையால் சரியான நேரத்தில் வாகனங்களை டெலிவரி செய்ய முடியவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இப்போது, நெகட்டிவ் நியூட்ரலாக இருப்பது, அடுத்த இரு மாதங்களில் இழப்பும், லாபமும் இல்லாத நியூட்ரல் போக்குக்கு வாகனவிற்பனை திரும்பும் என்று நம்புகிறோம் ” எனத் தெரிவித்தார்.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 11 லட்சத்து 75ஆயிரத்து 832 ஆக இருந்தது, இது 2022, ஜனவரியில் 13.44 சதவீதம் குறைந்து, 10 லட்சத்து 17ஆயிரத்து 785ஆகக் குறைந்துவிட்டது.

2021, ஜனவரியில் டிராக்டர் விற்பனை 61ஆயிரத்து 485 விற்பனையான நிலையில் 2022, ஜனவரியில் 9.86%விற்பனை குறைந்து, 55,421 மட்டுமே விற்றது. 

வர்த்தகரீதியான வாகநங்கள் விற்பனை கடந்த மாதத்தில் 20.52 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. கடந்த 2021ம் ஆண்டில் 56,227 வாகனங்கள் விற்பனையான நிலையில், 2022, ஜனவரியில் 67,763 வாகனங்கள் விற்பனையானது.

மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 29.80% வளர்ந்துள்ளது. கடந்த 2021, ஜனவரியில் 31,162 வாகனங்கள் விற்பனையான நிலையில் 2022, ஜனவரியில் 40,449 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் கடந்த 2021 ஜனவரியில் 16 லட்சத்து 12 ஆயிரத்து 130 வாகனங்கள் விற்பனையானநிலையில், 2022, ஜனவரியில் விற்பனை 10.69 சதவீதம் சரிந்து, 14 லட்சத்து 39ஆயிரத்து 749 வாகனங்கள் விற்பனையாகின.